குர்பானி இறைச்சியை பங்கிடும் போது அதில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (5561)

அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.

நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

அறிவிப்பவர் : அதா பின் யசார்.

நூல் : திர்மிதி (1425)

 

குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.

(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி).

நூல் : முஸ்லிம் (3643)

 

எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரன்ப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed