அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானி கொடுக்கலாமா?

அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)

பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 162)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,

அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி).

நூல் : முஸ்லிம் (3659)

அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. 

அல்குர்ஆன் (5 : 3)

 

எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed