இவ்வசனங்களில் (8:43, 12:4, 12:5, 12:36, 12:37, 12:43, 12:44, 12:100, 37:102, 37:105, 48:27) பல்வேறு கனவுகள் பற்றி கூறப்படுகிறது.
பொதுவாகக் கனவுகள் பற்றி அதிகமான முஸ்லிம்கள் சரியான விளக்கமில்லாமல் உள்ளனர். கனவுகளுக்கு விளக்கம் என்ற பெயரில் வாயில் வந்தவாறு சிலர் உளறுவதை நம்பி வழிகேட்டில் பலர் விழுந்து விடுகின்றனர். எனவே கனவுகள் பற்றி நாம் சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.
“கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4555
“தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு” என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டபோது முஸ்லிம் காணுகின்ற கனவாகும் என்று விளக்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத் 13322
வணக்க வழிபாடுகளும், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களும் முழுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. எனவே கனவின் மூலம் மார்க்கம் சம்மந்தமான எந்த வழிகாட்டுதலும் யாருக்கும் வராது. எதிர்காலத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கவுள்ள பொருட்செல்வம், மழலைச் செல்வம், பட்டம், பதவிகள் போன்றவற்றை சில நேரங்களில் முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு.
கவலையை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் உள்ள ஈடுபாட்டைக் குறைப்பதற்காக ஷைத்தான்கள் மூலம் ஏற்படும் கனவுகள் இரண்டாவது வகையாகும்.
நமது ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்களும் கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியடையவோ, கவலைப்படவோ ஒன்றுமில்லை. இதற்கு எந்த அர்த்தமுமில்லை. இது மூன்றாவது வகையாகும்.
“இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!” என்று யாரோ கூறுவது போல் ஒருவர் கனவு காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல. ஏனெனில் இன்னின்ன நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை.
மேலும் இது இறைவன் புறத்திலிருந்து வந்தது என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இதுபோல் கூறப்பட வேண்டும். வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.
“இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக இந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு” என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.
ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும், வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர். எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.
அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூறமாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்பது உறுதி.
அல்லாஹ்வும், அவனது தூதரும் தடுத்தவைகளை அனுமதிப்பது போன்றவை
அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அனுமதித்தவைகளைத் தடுப்பது போன்றவை
வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் வகையில் அமைந்தவை
போன்ற கனவுகளை யார் கண்டாலும் அது ஷைத்தானின் வேலையே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கனவுகள் மூலம் சட்டங்கள் வர முடியாது என்றால் இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிடுவது பற்றிய கட்டளையைக் கனவின் மூலமாகத் தானே பெற்றார்கள் என்று திருக்குர்ஆன் (37:102, 37:105) கூறுகிறதே என்ற சந்தேகம் ஏற்படலாம்.
நபிமார்கள் காணும் கனவுகள், வஹீ எனும் இறைச் செய்தியாகும். இறைத்தூதர்களின் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட முடியாது. எனவே அவர்களுக்குக் கனவில் வரும் கட்டளைகளும் இறைவனின் கட்டளைகள் தான்.
நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும்.
“நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 7044
கெட்ட கனவுகளைக் கண்டால் அதற்காகக் கவலைப்படுவோர் உள்ளனர். அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடுவதற்காக ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடியலைந்து நிம்மதியை இழப்பவர்களும் உள்ளனர்.
“நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தனக்கு விருப்பமானவரைத் தவிர மற்றவருக்கு அதைக் கூறவேண்டாம். தனக்குப் பிடிக்காத கனவை ஒருவர் கண்டால் அதனால் ஏற்படும் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்பு தேடட்டும். மேலும் இடது புறம் மூன்று தடவை துப்பட்டும். எவரிடமும் அது பற்றிக் கூறக் கூடாது. இவ்வாறு நடந்து கொண்டால் அவருக்கு அவரது கனவால் எந்தக் கேடும் எற்படாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரி 7044
எந்தக் கனவைக் காணும்போது நமக்கு கவலையோ, அச்சமோ ஏற்படுகிறதோ அவைகளும் கெட்ட கனவுகள்.
இவை தவிர அர்த்தமற்ற கனவுகளையும் நாம் காணலாம். இவையும் கெட்ட கனவுகள் தாம். அது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர்.
ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். “என் தலை வெட்டப்படுவது போலவும் அதை நான் விரட்டிச் செல்வது போலவும் கனவு கண்டேன்” என்று அவர் கூறியபோது, “ஷைத்தான் உன்னோடு கனவில் விளையாடுவதைப் பற்றி (யாருக்கும்) கூறாதே” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4563, 4565
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் “ஒருவரது கனவில் ஷைத்தான் விளையாடினால் அதை யாருக்கும் கூற வேண்டாம்” என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4564
எந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசினாலும் மக்கள் அதற்கு ஆதாரம் கேட்பார்கள். ஆனால் கனவு கண்டதாக ஒருவர் கூறினால் அதற்கு யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள்.
இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு காணாததைக் கண்டதாக மனிதன் தயக்கமில்லாமல் பொய் சொல்லலாம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான குற்றமாக அறிவிக்கிறார்கள்.
“தன் தந்தையல்லாத இன்னொருவரைத் தந்தை எனக் கூறுவதும், கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவதும், (இறைத்தூதராகிய) நான் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் பொய்களில் மிகப் பெரிய பொய்களாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாஸிலா (ரலி)
நூல்: புகாரி 3509
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.
“யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 610, 6197
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.
“என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்பது தான் அந்த நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6993
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.
“என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும்போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.
அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும்போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.
இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்” என்று கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை சான்றாகக் கொண்டு நான் தான் முஹம்மது நபி என்று கனவில் ஒருவர் நம்மிடம் சொல்வது போல் கண்டால் கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று சிலர் கருதுகின்றனர்.
என் பெயரைச் சொல்லி ஷைத்தான் கனவில் வரமாட்டான் என்று சொல்லப்பட்டால் தான் அதிலிருந்து இந்தக் கருத்தை எடுக்க முடியும். ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்ற சொல்லில் இருந்து இவர்கள் கூறும் கருத்தை எடுக்க முடியாது.
ஷைத்தான் அவனுக்கே உரிய வடிவில் வந்து நான் தான் முஹம்மத் நபி என்று சொல்லலாம். அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அது போன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் “நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?” என்று கூறுவாரா? என்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.
நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. “உங்களை நான் கனவில் கண்டேன்” என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.
கனவில் எத்தனையோ விஷயங்களை ஒருவர் நம்மிடம் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய் “நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்” என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. “நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?” என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.
எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்று கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்கு கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்கு காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கனவுகளின் பலன்கள் என்ற பெயரில் பலரும் நூல்களை எழுதித் தள்ளியுள்ளனர். இப்னு ஸீரின் என்பவர் கனவுகளின் விளக்கத்தை அறிந்தவராக இருந்தார் எனவும் கூறி வருகின்றனர். இது கட்டுக் கதையாகும்.
இன்னின்ன கனவுக்கு இதுதான் பலன் என்று கூறுவதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்தச் சான்றுமில்லை.
“யானையைக் கண்டால் இது நடக்கும். பூனையைக் கண்டால் அது நடக்கும்” என்று உளறும் போலிகளின் பேச்சை நம்பி நாம் நிம்மதி இழக்கத் தேவையில்லை.
நல்ல கனவுகள் மூலம் இறைவன் நமக்கு நற்செய்தி கூறுகிறான் என்றால் அதன் விளக்கத்தை நாமே புரிந்து கொள்ளும் வகையில் தான் கூறுவான்.
“அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாது” என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 35:14)
எனவே நமக்கு ஒரு நற்செய்தி கூற விரும்பும் இறைவன் நமக்குப் புரியாத வகையில் கூறிவிட்டு இந்த உளறுவாயர்களின் விளக்கத்தைக் கேட்கும்படி விட மாட்டான்.
எனவே நாம் காணும் கனவுக்கு எவரிடமும் விளக்கம் கேட்கத் தேவையில்லை. அது எந்த நற்செய்தியைக் கூறுகிறது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதுதான் அதற்கான விளக்கம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
12 ஆம் அத்தியாயத்தில் யூஸுஃப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு எனப் பல கனவுகளும், அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாமும் கனவுகளுக்குப் பலன் சொல்லக் கிளம்பிவிடக் கூடாது.
ஏனெனில் 12:37 வசனத்தில் கனவுகளுக்கு விளக்கம் கூறும் திறனை அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்ததாக யூஸுஃப் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இது இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
தர்காவழிபாடு செய்வோர் கனவைத்தான் தங்களின் முதல் ஆதாரமாக வைத்துள்ளனர். கனவைப் பற்றி சரியான முறையில் அவர்கள் புரிந்து கொண்டால் கனவைக் காரணம் காட்டி வழிகெட மாட்டார்கள்.