உடல் தானம் செய்யலாமா?

உடலையும், கண்கள், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கண்கள், கிட்னி போன்ற மனித உறுப்புக்களைப் பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.

கண்கள், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாகக் கொடுத்து பிறரை வாழவைப்பதைத் தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ, இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் அனைத்து மனிதர்களும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை.

மாறாக உடலின் ஒவ்வொரு பாகங்களும் மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும், ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ, மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்கள் அப்படியே எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

நூல் : புகாரி 2474, 5516

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.

உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

1307 – أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ، بِمَرْوَ، ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ الْفَضْلِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ الْمَعَافِرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنَ السُّنْدُسِ، وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ، وَمَنْ حَفَرَ لِمَيِّتٍ قَبْرًا فَأَجَنَّهُ فِيهِ أُجْرِيَ لَهُ مِنَ الْأَجْرِ كَأَجْرِ مَسْكَنٍ أُسْكِنَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَلَمْ يُخَرِّجَاهُ “

ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு (ரலி)

நூல்கள் : ஹாகிம், பைஹகீ, தப்ரானி

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவப் படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. ஏனெனில் மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed