இறைவனுக்குத் தேவைகள் இல்லை
ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:2:48.)
ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:2:123.)
தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(திருக்குர்ஆன்:2:263.)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(திருக்குர்ஆன்:2:267.)
(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.
(திருக்குர்ஆன்:3:91.)
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(திருக்குர்ஆன்:3:97.)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன்:4:131.)
உமது இறைவன் தேவையற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.
(திருக்குர்ஆன்:6:133.)
அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?
(திருக்குர்ஆன்:10:68.)
நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்று மூஸா கூறினார்.
(திருக்குர்ஆன்:14:8.)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவையற்றவன்.
(திருக்குர்ஆன்:22:64.)
கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்;கண்ணியமிக்கவன்.
(திருக்குர்ஆன்:27:40.)
உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
(திருக்குர்ஆன்:29:6.)
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏக இறைவனை) மறுக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம்.
(திருக்குர்ஆன்:31:12.)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:31:26.)
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:35:15.)
நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
(திருக்குர்ஆன்:39:7.)
அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடுவதற்காக அழைக்கப்பட்டால் உங்களில் கஞ்சத்தனம் செய்வோரும் உள்ளனர். யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். நீங்களே தேவைப்படுவோர். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு ஒரு சமுதாயத்தை உங்களுக்குப் பகரமாக அவன் ஆக்குவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:47:38.)
அவர்கள் தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுவார்கள். யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:57:24.)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:60:6.)
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன்:64:6.)
அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
(திருக்குர்ஆன்:112:2.)
இறைவனுக்கு மனைவி இல்லை (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
(திருக்குர்ஆன்:6:101.)
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(திருக்குர்ஆன்:72:3.)