ஹாஜத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா?

இங்கு (புருனையில்) அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு முன்னும், பின்னும் “ஹாஜத்’ தொழுகை என்று நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுகின்றனர். இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

“யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்.

அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்’ என்று கூறட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)

நூல் : திர்மிதி 441

“இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவர்’ என்று திர்மிதி இமாம் கூறுகின்றார்கள்.

இந்தப் பெயரில் தொழுகை இல்லை என்றாலும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளையாகும்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!

திருக்குர்ஆன் 2:153

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)

நூல் : அபூதாவூத் 1124

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தொழுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகும்.

இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம் ஜமாஅத்தாகத் தொழுவதாகத் தெரிகின்றது. இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒன்றாகும். அவரவர் தனித்தனியாகத் தொழுது இது போன்ற சோதனைகளை விட்டும் பாதுகாப்பு தேடலாம்.

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed