ஹதீஸ் கலை 09

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஒருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பினத் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் (596) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில் (1779) “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலவீனமானது என்று முடிவு செய்ய முடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இதற்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகையால் அதை இங்கே கூறுவதை விட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில் தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 3516வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ் கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.

2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.

3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.

4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.

5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்து நிபந்தனைகள் இடம் பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed