ஷைத்தானின் சூழ்ச்சி வலை
——————————————-
மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்குப் பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
அல்குர்ஆன் 35:6
நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்’ என்று கூறினான்.
பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்’ (என்றும் ஷைத்தான் கூறினான்).
அல்குர்ஆன் 7:16,17
என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’ என்று கூறினான்.
அல்குர்ஆன் 15:40
நாம் செய்துவருகின்ற அனைத்துக் கெட்ட காரியங்களும், அருவருக்கத்தக்க காரியங்களும் தீமைகளை நன்மைகளைப் போன்று ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுவது தான் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றான்.
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
அல்குர்ஆன் 2:168
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் 12:5
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:29
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
அல்குர்ஆன் 7:27
இன்னும் இதுபோன்ற ஏராளமான உபதேசங்களில் ஷைத்தான் மனிதர்களுக்கு கேவலத்தையும் அவமானத்தையும் பெற்றுத் தருகின்ற பகிரங்க எதிரியாகவும் துரோகியாகவும் இருக்கின்றான் என்று இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
———————————
ஏகத்துவம்