வீட்டில் தொழுவது சிறந்தது
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது அவர்களின் உரிமை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது.
அதே நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொண்டு வீட்டிலேயே தொழுது கொள்வது சிறந்தது. இதனால் பெண்கள் பள்ளிக்குச் செல்வது தவறு என்று எண்ணிவிடக்கூடாது.
பள்ளிக்கு வருவதினால் மார்க்க உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. சஹாபிய பெண்கள் நபியவர்களின் காலத்தில் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். மார்க்க அறிவை அதன் மூலம் அதிகப்படுத்திக்கொண்டார்கள்.
உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (480)
பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்ததாகும்.
வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறைக்குள் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : அபூதாவுத் (483)
ஆண்கள் பள்ளிக்கு வந்து கூட்டுத்தொழுகையில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். பெண்கள் கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
இதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். கலந்துகொண்டால் தவறில்லை.
குழந்தை அழும்போது விரைவாக தொழுது முடிக்கலாம்
தொழுதுகொண்டிருக்கும் போது குழந்தை அழுதால் விரைவாக தொழுகை முடித்துக்கொள்வதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல் : புகாரி (707)
குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு தொழலாமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் – அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோüல்) சுமந்துகொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; நிலைக்குச் செல்லும்போது (மீண்டும்) உமாமாவை (தமது தோüல்) தூக்கிக்கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அபூ கத்தாதா (ரலி)
நூல் : புகாரி (516)
ஜும்ஆ தொழுவது
பெண்களின் மீது கடமையில்லை.
ஜ‚ம்ஆத் தொழுவது பெண்களின் மீது கடமையில்லை. விரும்பினால் தொழுதுகொள்ளலாம். விரும்பினால் விட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டிலே லுஹர் தொழுதுகொள்ளலாம்.
பெண்கள் அடிமைகள் நோயாளிகள் சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : அபூதாவுத் (901)
நபித்தோழியர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். எனவே கலந்துகொள்ளவும் அனுமதியுள்ளது.
நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்‘ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலிலி) அவர்களின் சகோதரி
நூல் : முஸ்லிம் (1580)