மறப்போம் மன்னிப்போம்

”ஆதமின் மக்கள் அனைவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றனர்” என்பது நபிமொழி.

நூல்: அஹ்மத் 20451

சண்டையிட்டுக் கொள்ளும் சகோதரர்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:11)

இந்த வசனம், சண்டையிட்டுக் கொள்பவர்களை சமாதானம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுவதோடு, நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர! ‘அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள்’ என்று கூறப்படும்.

(நபிமொழி, நூல்: முஸ்லிம் 4653)

நாம் மன்னித்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் .

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

(அல்குர்ஆன் 7:199)

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 2:263)

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.

(அல்குர்ஆன் 4:114)

கணவன் மனைவியிடம் பிரச்சனை வந்தால் இருவரும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது.

(அல்குர்ஆன் 4:128)

போர்க்களங்களில் கூட எதிரிகள் சமாதானத்திற்கு வந்தால் அதையே ஏற்க வேண்டும் .

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 8:61)

அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் 4:90)

நம்மை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்ற முயற்சிக் வேண்டும். அவர்களுடன் சேர்ந்து வாழ முயல வேண்டும்.

நபிகளார் கூறுகிறார்கள்:

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

(நூல்: புகாரி 5991)

நமது உள்ளத்தை எவ்வளவு பாதித்திருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும்

அபூபக்ர் (ரலி) அவர்களின் அன்பு மகளும், நபிகளாரின் அன்பு மனைவியுமான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிரிகள் வைத்தனர். அவர்களின் வலையில் சில நபித்தோழர்களும் விழுந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நபிகளாரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் கடுமையாகப் பாதித்தது.

(விரிவாக அறிய பார்க்க: புகாரி 4141)

இந்நிலையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கி, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அப்போது இந்த அவதூறு பரப்பியவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உதவி பெற்று வந்தவருமான மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தார்கள். இதைக் கண்டித்துப் பின்வருமாறு அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கினான்

”உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ”அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 24:22)

மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறிய போது, தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் போது தான் என் மன்னிப்பு உங்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறி விட்டு மிஸ்தஹ் என்ற நபித்தோழருக்குப் பழையபடி உதவிகளை செய்யத் தொடங்கினார்கள்.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அவர்களிடமிருந்து பிரிபவர்கள் இந்தச் சம்பவத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறு செய்வர்களை மன்னிப்பது அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுத் தரும். அல்லாஹ்வின் மன்னிப்பை விட மகத்தான பாக்கியம் எது இருக்க முடியும்?

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed