மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது
நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அதனை ஏற்காத மக்கள், ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தனர்.
மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அந்த மக்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான். (அல்குர்ஆன் 36:78)
“நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49)
“எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?” என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். (அல்குர்ஆன் 37:51-53)
“நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் 56:46, 47)
“குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?” என்று கேட்கின்றனர். மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா? அப்படியானால் அது இழப்பை ஏற்படுத்தும் மீளுதல் தான்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 79:10-12)
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? (அல்குர்ஆன் 75:3)
இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:38)
தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். “அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 64:7)
“உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. “மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் “இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 11:7
“நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 6:29
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறு உலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் இறைத் தூதர்களை நம்புவதற்கு இந்த விஷயமே முதல் தடையாக இருந்தது என்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
“நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது உயிர்ப்பிக்கப்படுவீர்கள்’ என்று இவர் உங்களுக்கு எச்சரிக்கிறாரா?”
“நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது”
“நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ் கிறோம்; நாம் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்”
“இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை” (என்று அந்தப் பிரமுகர்கள் கூறினர்.)
அல்குர்ஆன் 23:35-38
மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனது தான் இறைத் தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்கள் நம்பாமல் போனதற்குக் காரணம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது.
ஆனால் அதே சமயம் இன்னொரு கூட்டமோ அதை விட உறுதியாக மறுமை வாழ்வின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது.
இதற்காக அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
தரக் குறைவான வார்த்தைகளால் ஏசப்பட்டார்கள். எனினும் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.
நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்து விட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்களும் அவர்களைச் சிறிதளவும் அசைக்க முடியவில்லை.
குறைந்த எண்ணிக்கையினராகவும் பலவீனர்களாகவும் இருந்த நிலையிலும், பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை தான் காரணம்.