பெருநாள் தொழுகை சுன்னத்தா?

பெருநாள் தொழுகை சுன்னத்தா? https://eagathuvam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

பெருநாள் தொழுகை கட்டாயக் கடமை என நேரடியாக எங்கும் சொல்லப்பட்டதாக இல்லை. வலியுறுத்தப்பட்ட நபிவழியாகவே புரிய முடிகிறது.

பெண்களை திடலில் வரச் சொன்னார்கள், மாதவிடாய் பெண்களும் வர வேண்டும் என்று சொன்னார்கள் என்றெல்லாம் சிலர் வாதம் வைத்து, இந்த தொழுகை கட்டாயக் கடமை தானே என்கின்றனர்.

அவர்களது இந்த வாதம் பெருநாள் தொழுகை கட்டாயம் என நிறுவவில்லை.
மாறாக, திடலில் ஒன்று குழுமுவது கட்டாயம் என்பது தான் இந்த வாதங்கள் மூலம் நிறுவப்படுகிறது.

அதாவது, பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழக் கூடாது, திடலில் தான் தொழ வேண்டும் என்பது தான் இங்கே கட்டாயப்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் பெண்கள் கூட, தொழுகையில் கலந்து கொள்ளாவிட்டாலும் அந்த பயானிலும், மக்கள் ஒன்று கூடலிலும் கலந்து கொள்ளட்டும் என்று சொல்லப்படுவதும், திடலின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், எதை கட்டாயம் என நிறுவ இவர்கள் இந்த வாதத்தை வைக்கிறார்களோ, அந்த தொழுகையை மாதவிடாய் பெண்கள் தொழாமல் தான் இருக்கிறார்கள்.
தொழாவிட்டாலும் அந்த சபைக்கு வா, என்பது திடலுக்கான முக்கியத்துவமே அன்றி தொழுகைப் பற்றியது அல்ல என்பதை புரியலாம்.

இதனை அடிப்படையாக கொண்டு சிந்திக்குக் போது, இந்த தொழுகையானது மிகவும் வலியுறுத்தப்பட்டது, இயன்ற அளவு பேண வேண்டிய, முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று என்று புரியலாமே தவிர, கட்டாயக் கடமை என்றோ, தொழ தவறும் பட்சத்தில் அது பாவமான காரியமாகி விடும் என்றோ புரிய முடியவில்லை.

அது கட்டாயக்கடமை இல்லை என்பதற்கு கீழ்காணும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் (என்பது) இரவிலும், பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்’ என்றார்கள். உடனே அவர், ‘அதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கு அவர்கள், ‘நீர் விரும்பிச் செய்தாலே தவிர வேறு இல்லை’ என்றார்கள். அடுத்து, ‘ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், ‘அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கு அவர்கள், ‘நீர் விரும்பிச் செய்தாலே தவிர வேறு இல்லை’ என்றார்கள். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், ‘அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?’ என்றார். அதற்கு அவர்கள் ‘நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை’ என்றார்கள். உடனே அம்மனிதர், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்’ என்று கூறினார்கள்.


நூல்: புகாரி 2678, 6956.

الله اعلم

ஆய்வு: Nashid Ahmed

You missed