பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்கள்: புகாரி 5238, முஸ்லிம் 666

முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்கள்: புகாரி 578, முஸ்லிம் 1021

‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்: புகாரி 707

‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி),

நூல்: முஸ்லிம் 1442

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?‘ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 900

பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.

நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 675

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed