பெண்கள் நறுமணம் பூசலாமா?
பிறரை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நறுமணம் பூசுவதை மார்க்கம் தடைசெய்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036)
பிறர் நுகர வேண்டும் என்பதற்காக என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் வார்த்தை கவனிக்கத்தக்கதாகும். தவறான எண்ணமில்லாமல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காக பூசுவது தவறில்லை என்பது இதிலிருந்து விளங்குகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் நறுமணத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இஷாத் தொழுகைக்கு வரும் போது மாத்திரம் நறுமணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பெண்கள் கட்டளையிடப்பட்டார்கள். மற்றத் தொழுகைகளுக்கு வரும் போதோ அல்லது தொழுகை அல்லாத மற்ற நேரங்களிலோ நறுமணம் பூசக்கூடாது என்றோ அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (675)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள்.
உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு (எனது தாய்) உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக் கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (4300)
நறுமணத்தைப் போன்றே பூக்களையும் பிறரைக் கவரும் நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது. தவறான எண்ணமில்லாமல் பூவின் அழகை விரும்பியோ அதன் வாசனையை வரும்பியோ பூக்களை சூட்டிக்கொண்டால் அதில் தவறு ஏதும் இல்லை.
ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் எந்தக் காரியத்தையும் ஒரு பெண் செய்யக்கூடாது என்பதால் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த அதிக நறுமணத்தைத் தருகின்ற வாசனை திரவியங்களை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.