பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

[அல்குர்ஆன் 7:204]

நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!’ என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),

நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162

‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 612

ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.

‘இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 782

இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம்.

‘இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து ‘ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அதா,

நூல்: பைஹகீ

துணை சூராக்கள்

சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.

முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்கள்: புகாரி 776, முஸ்லிம் 686

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: நஸயீ 472

ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல்

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு’ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.

நூல்: அபூதாவூத் 693

வரிசை மாற்றி ஓதுதல்

துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ள வரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம். உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113 வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம்.

ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: முஸ்லிம் 1291

ஒரு அத்தியாயத்தைப் பிரித்து ஓதுதல்

துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும்.

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில் பிரித்து ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: நஸயீ 981

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]