நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது

 ‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன்’

 இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

 ‘இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்’ என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

 ‘உனக்காக நான் இதைச் செய்கிறேன்’ என்று இறைவனிடம் நாம் கூறும் போது ‘அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்’ என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது. எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

 நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).நூல்: புகாரி 6608, 6693

 நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 6692

 நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

 நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான்.

 இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

 நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

  பிரார்த்தனை தான் சிறந்த வழி அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்ன தான் செய்ய வேண்டும்? இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.  ‘இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?’ என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது. உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு ‘இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக’ என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும். வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழி காட்டுகிறான். பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.  (அல்குர்ஆன் 2:45) நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)   நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம் ‘நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது’ என்றும் ‘நேர்ச்சை செய்யாதீர்கள்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் ‘அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது’ என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்குர்ஆன் 2:270) அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 76:7) பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.  (அல்குர்ஆன் 22:29) ‘உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695 மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வணக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே! நேர்ச்சை என்பது இஸ்லாத்தில் ஓர் வணக்கமாகும். மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு இறைவன் வலியுறுத்துவதாலும், மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று கூறுவதாலும், கஅபாவைத் தவாஃப் செய்வதுடன் இணைத்து நேர்ச்சைகுறிப்பிடப்படுவதாலும் நேர்ச்சை ஓர் வணக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எல்லாவிதமான வணக்கங்களையும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். தமிழக முஸ்லிம்களில் பலர் நேர்ச்சையை இறை வணக்கம் என்று விளங்காத காரணத்தால் இறந்து போன மனிதர்களுக்கு நேர்ச்சை செய்து வருகின்றனர். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடு வதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா?’ எனக் கேட்டார்கள். இல்லை’ என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். ‘அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை’ என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)நூல்: அபூதாவூத் 2881 இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட மனிதர் அல்லாஹ்வுக்காகத் தான் நேர்ச்சை செய்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவதாக நேர்ச்சைசெய்தார். அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இதை அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வுக்குச் செய்த நேர்ச்சையானாலும் மற்றவர்களுக்காகச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியாருக்காக நேர்ச்சை செய்வது கூடாது என்பதைப் போலவே அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்ட நேர்ச்சையைக் கூட நாகூரில் வைத்து நிறைவேற்றக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாகூர் எனும் ஊர் அறியாமைக் கால வழிபாடு நடக்கும் இடமாக அமைந்துள்ளது. அங்கே போய் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டாலும் அது நாகூரில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பலியிடப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். ‘நான் எனது மூன்று ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள் ‘அறியாமைக் காலத்தவர் ஒன்று கூடும் இடமாக அது இருந்தால், அல்லது அறியாமைக் காலத்தவர் பண்டிகை கொண்டாடும் இடமாக இருந்தால், அல்லது வழிபாடு செய்யப்படுபவை அமைந்துள்ள இடமாக இருந்தால் அந்த இடத்தில் உன் நேர்ச்சையை நிறைவேற்றாதே! அவ்வாறு இல்லாதிருந்தால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கர்தமா (ரலி)நூல்: அஹ்மத் 16012, 22112 அல்லாஹ்வுக்காக மட்டும் தான் நேர்ச்சைசெய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுத்தும் இடத்தில் அதை நிறைவேற்றக் கூடாது என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய நேர்ச்சையை மற்றவர்களுக்குச் செய்தால் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என்ற உறுதிமொழியை மீறுவதாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுமாகும். அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மறுமையில் அறவே வெற்றி பெற முடியாது என்பதை மனதில் வைக்க வேண்டும். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48) தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.  (அல்குர்ஆன் 4:116) ‘மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்’ எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் கூறினார்.  (அல்குர்ஆன் 5:72) இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.  (அல்குர்ஆன் 6:88) ‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.  (அல்குர்ஆன் 39:65, 66) அறியாமல் செய்த நேர்ச்சைகள் மார்க்கத்தைச் சரியாக அறிந்து கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளனர். ‘அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சைசெய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696, 6700 அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை விடப் பெரிய பாவம் ஏதும் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது. எவற்றை நேர்ச்சை செய்யலாம்? ‘நாம் எந்த நேர்ச்சை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும்’ என்பதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நினைக்கின்ற எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் நேர்ச்சை செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுக்காக நாம் செய்யும் நேர்ச்சைகள் இரண்டு தன்மைகளில் அமைந்திருக்க வேண்டும். 1. இறைவன் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற வணக்கங்களில் ஒன்றாக அது அமைந்திருக்க வேண்டும். 2. அல்லது மனித சமுதாயத்துக்கு உதவும் வகையில் அமைந்திருக்க வேண்டும். இந்த இரண்டு தன்மைகளில் இல்லாத எந்தக் காரியத்தையும் நாம் நேர்ச்சை செய்ய முடியாது. உதாரணமாக இரண்டு ரக்அத் தொழுதல், ஐந்து நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற காரியங்களை நேர்ச்சையாகச் செய்யலாம். ஏனெனில் இவை மார்க்கத்தில் வணக்கம் என்று கூறப்பட்டுள்ளன. அது போல் ஏழைக்கு உணவு அளித்தல், மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தை நீக்க கிணறு வெட்டுதல் போன்ற காரியங்களையும் நேர்ச்சைசெய்யலாம். ஏனெனில் இவை மனித குலத்துக்கு நன்மை தரக் கூடியவையாகும். இவ்வாறு இல்லாத எந்த ஒன்றையும் நேர்ச்சைசெய்யக் கூடாது. இவ்விரு அம்சங்களில் அடங்காத பல நேர்ச்சைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.   மௌன விரதம் ‘எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நான் இரண்டு நாட்களுக்கு எதையும் பேச மாட்டேன்’ என்று மௌன விரதம் இருக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. ஒருவர் மௌனமாக இருப்பது வணக்க முறையில் ஒன்றாக அமைந்திருக்கவில்லை. மேலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. முந்தைய சமுதாய மக்களுக்கு மௌன விரதம் என்பது ஒரு வணக்கமாக ஆக்கப்பட்டிருந்தது. மர்யம் (அலை) அவர்கள் மௌன விரதம் இருந்ததாகப் பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ‘நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்’ என்று கூறுவாயாக!  (அல்குர்ஆன் 19:26) இவ்வாறு மௌன விரதம் இருப்பது நமக்குத் தடை செய்யப்பட்டு விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர்.  ‘அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 6704 பேசாமல் இருப்பது ஓர் வணக்கமல்ல. அவ்வாறு நேர்ச்சை செய்யக் கூடாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல் ‘இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயிலில் நடப்பேன்’ என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர். இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சைசெய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸிலிருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன. ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று விசாரித்தனர். ‘நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்’ என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: புகாரி 1865, 6701 ஒரு முதியவர் தனது இரண்டு புதல்வர்கள் மீது சாய்ந்து கொண்டு நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். ‘இவரது நிலைக்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தனர். ‘இவர் (இவ்வாறு) நேர்ச்சைசெய்து விட்டார்’ என்று அவரது இரண்டு மகன்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பெரியவரே வாகனத்தில் ஏறுவீராக! நீரும், உமது நேர்ச்சையும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 3101 எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது. வெறுமனே நடப்பதை நேர்ச்சை செய்யாமல் ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக ஒருவர் நேர்ச்சைசெய்தால், நடந்து செல்ல அவருக்குச் சக்தியும் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் நபிவழியிலிருந்து நாம் அறியலாம். என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்’ என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)நூல்: புகாரி 1866 அதிக நன்மையை நாடி மூன்று பள்ளிவாசலுக்கு மட்டும் பயணம் செய்வது சிறப்புக்குரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கஅபா, மஸ்ஜிதுன்னபவி, பைத்துல் முகத்தஸ் ஆகியவையே அந்த மூன்று பள்ளிவாசல்கள்.  (புகாரி 1189, 1197, 1864, 1996) கஅபா ஆலயம் அந்த மூன்று ஆலயங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்காகப் பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் புனிதமானதாகும். ஆயினும் மதீனாவிலிருந்து நடந்தே கஅபா ஆலயம் செல்வது சாதாரணமாக இயலக் கூடிய காரியமல்ல. எனவே தான் சிறிது தூரம் நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு கட்டளையிடுகிறார்கள். கஅபா ஆலயத்திற்கு நடந்து செல்வதாகச் செய்த நேர்ச்சையைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகின்றனர். ஒரு அடையாளத்திற் காகச் சிறிது தூரம் நடப்பதே போதுமானது எனக் கூறி மக்களின் சிரமத்தைக் குறைத்து விட்டனர். ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தால் சிறிது நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லலாம்.  தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல் ஒருவர் நேர்ச்சை செய்வதாக இருந்தால் தனக்கு உடமையான பொருட்களிலும், தன் வைகசம் உள்ள பொருட்களிலும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும். தன் வைகசம் இல்லாத விஷயங்களில் நேர்ச்சை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது நேர்ச்சையாகாது. ‘தன் கைவசம் இல்லாதவற்றில் ஆதமுடைய மகன் மீது நேர்ச்சை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) நூல்: புகாரி 6047 ஒருவன் அன்றாடம் தனது உணவுக்கே சிரமப்படுகிறான் என்றால் நான் நூறு ஏழைகளுக்கு உணவளிப்பேன் என்று நேர்ச்சைசெய்யக் கூடாது. இவ்வாறு அவன் நேர்ச்சைசெய்யும் போது நூறு ஏழைகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான உணவோ, பணமோ கைவசம் இருந்தால் மட்டுமே இவ்வாறு நேர்ச்சை செய்ய வேண்டும். ஒருவன் இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது அவனிடம் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கும் வசதி இல்லாவிட்டால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்றும் அவசியம் இல்லை. எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்கிறார். இவர் நேர்ச்சை செய்யும் போது அதற்கான வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் போது வசதியை இழந்து விட்டார் என்றால் இவர் மீது நேர்ச்சையை நிறைவேற்றும் கடமை உண்டு. அதைச் செய்ய இயலாத போது அதற்கான பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும். செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சைசெய்தல் இறைவனைத் திருப்திபடுத்துவதாக எண்ணிக் கொண்டு தம்மைத் தாமே வேதனைப்படுத்திக் கொள்வோர் செருப்பணியாமல் இருப்பதையும் நேர்ச்சையாகச் செய்து வருகின்றனர். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு செருப்பு அணியாமல் நடந்து செல்வதாக நேர்ச்சைசெய்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள் (சிறிது நேரம்) நடந்தும் (சிறிது நேரம்) வாகனத்தில் ஏறியும் செல்லட்டும் என்றார்கள்.  அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)நூல்: முஸ்லிம் 3102 பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்த நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. அது நேர்ச்சையாகவும் ஆகாது. ‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 6696, 6700 ‘அல்லாஹ்வுக்காக திருடுவேன்; கொள்ளையடிப்பேன்; விபச்சாரம் செய்வேன்’ என்றெல்லாம் யாரும் நேர்ச்சை செய்ய மாட்டார்கள். ஆனாலும் நன்மை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள பல தீமைகள் சமுதாயத்தில் நிலவுகின்றன. இவற்றைச் செய்வ தாக நேர்ச்சை செய்வோர் சமுதாயத்தில் உள்ளனர். இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது. மவ்லூது, ஹல்கா, மீலாது, இருட்டு திக்ரு, கத்தம் பாத்திஹாக்கள், கந்தூரி விழாக்கள், கூடு, கொடிமரம் போன்ற காரியங்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தராமல் அவர்களின் காலத்துக்குப் பின் இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்ட அனாச்சாரங்களாகும். மேற்கண்ட காரியங்களை அல்லாஹ்வுக்காகச் செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் இக்காரியங்களைச் செய்யக் கூடாது. பாவமான காரியங்களில் நேர்ச்சை கிடையாது என்ற நபிமொழியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல் வணக்க வழிபாடுகளையும், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களையும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். வணக்கமாக இல்லாத காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு’ அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்’ எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார். அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார் கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார். அறிவிப்பவர்: புரைதா (ரலி)நூல்: திர்மிதீ 3623 இதே கருத்து அபூதாவூத் 2880, அஹ்மத் 21911, 21933 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டு அடிப்பது வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல. இதனால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளதால் இது போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றனர். போருக்குச் சென்ற நபியவர்கள் உயிருடனும், காயமின்றியும் திரும்ப வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் நேர்ச்சைசெய்கிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகிழ்விப்பதற்காகவும் இவ்வாறு நேர்ச்சை செய்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) உலகில் வாழும் போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் வணக்கமாகும். அந்த அடிப்படையில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்களால் மட்டும் நிறைவேற்ற இயன்ற வணக்கமாகும். மற்றவர்களுக்காக கொட்டு அடிப்பதோ, பாட்டுப் பாடுவதோ வணக்க வழிபாட்டில் சேராது. எனவே வணக்க வழிபாடுகள் அல்லாத காரியங்களை நேர்ச்சை செய்யக் கூடாது என்பதற்கு எதிரானதாக இதைக் கருதக் கூடாது.   சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல் ‘நான் நினைக்கின்ற காரியம் நிறைவேறினால் எனது சொத்துக்கள் முழுவதையும் அல்லாஹ்விற்காக வழங்குவேன்’ என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை அவர் அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த மனிதருக்கும் தனது சொத்துக்கள் முழுவ தையும் தர்மம் செய்யும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கோ, அதை விட குறைந்த அளவுக்கோ தான் தர்மம் செய்யும் அதிகாரம் உண்டு. தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்வதாக ஒருவர் முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தர்மம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தனது நேர்ச்சையை அவர் முழுமையாக நிறைவேற்றியவராக ஆவார். கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். பின்னர் அவர்களை அல்லாஹ் மன்னித்தான் என்பது பிரபலமான வரலாற்று நிகழ்ச்சியாகும். புகாரி 4418, 4676, 4677, 4678, 6690, 2758, 6255, 7225 ஆகிய ஹதீஸ்களில் இந்த வரலாற்றைக் காணலாம். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்ததற்காக என் செல்வம் அல்லாஹ்விற்காக நான் செய்யும் தர்மமாகும்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூன்றில் ஒரு பங்கு (தர்மம் செய்வது) உமக்குப் போதுமானதாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல் முன்திர்.நூல்: அஹ்மத் 15190, 15000

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed