தொழுகையை விட்டவன் காஃபிரா?

தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம் 134

நமக்கும், அவர்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமாகிறது தொழுகையாகும். யார் அதை விட்டாரோ, அவர் காஃபிராகி விட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூபுரைதா (ரலி)

நூல் : இப்னு அபீஷைபா

யார் தொழுகையை விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் (மன் தர(க்)கஹா ஃபகத் கஃபர) என்று தெளிவாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே தொழுகையை விட்டவர்கள் காஃபிர்களே என்பது இவர்களது வாதம். இத்தகையவர்களுக்கு ஜனாஸா தொழுகை கூடாது; அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; அவர்கள் அறுத்ததைச் சாப்பிடக் கூடாது; இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன சட்டமோ அது இவர்களுக்கும் பொருந்தும் என்று சவூதியின் அறிஞர் பின்பாஸ் எனும் அறிஞர் தீர்ப்பளித்துள்ளார்.

இச்செய்தியை அறிவிக்கும் அனைவரும் அறிஞர்களால் நம்பகமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள்.  எனினும் இந்த ஹதீஸை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறாகும். இந்தச் செய்தியை இவர்கள் குறிப்பிடும் பொருளில் புரிந்து கொள்வது எவ்வாறு தவறு என்பதைப் பார்ப்போம்.

இவர்களது வாதப் பிரகாரம் ஒருவர் அல்லாஹ்வை நம்பி அவனுக்கு இணை கற்பிக்காமல் தவ்ஹீதுடன் வாழ்ந்து மரணித்தாலும் தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார். அதில் நிரந்தரமாக இருப்பார். ஏனெனில் தொழுகையை விட்டதால் அவர் காஃபிர், இறை மறுப்பாளர் என்று சொல்ல வேண்டி வரும்.

ஆனால் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்துடன் வாழ்ந்து மரணித்தவர் சில தீமைகளைச் செய்திருந்தாலும் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகளைச் செய்யவில்லை என்றாலும் அவர் சொர்க்கம் செல்வார்; அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. குர்ஆனும் இதையே கூறுகின்றது.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(திருக்குர்ஆன் 4:48)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி. அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : புகாரி 5827

அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத்திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என முஆத் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அதற்கு முஆத் (ரலி) அவர்கள் இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்க, (இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக் கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 129

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான்.

அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான்.

அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.

அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர் : அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல் : திர்மிதி 2563

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல் : அஹ்மத் 20405

இறைவனுக்கு இணை கற்பிக்காமல் மரணித்துவிடும் சிலர் தீமைகளைப் புரிந்திருந்தும் அவர்களிடத்தில் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகள் எதுவும் இல்லாமல் இருந்தும் அவர்கள் சொர்க்கம் செல்வதாக மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தொழுகையை விட்டவர் நிரந்தர நரகத்திற்குரிய காஃபிர் என்று இருந்தால் தவ்ஹீதைத் தவிர வேறு நன்மைகள் இல்லாதவர் சொர்க்கம் சென்றிருக்க முடியாது. ஆனால் சொர்க்கம் சென்றதாக மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்படுவதிலிருந்து தொழுகையை விட்டவர் காஃபிர் (இறை மறுப்பாளர்) என்பது அந்த ஹதீஸின் பொருளாக இருக்க முடியாது என்பதைப் புரியலாம்.

இந்த அர்த்தத்தில் மேற்கண்ட செய்தி பயன்படுத்தப்படவில்லை எனில் அதன் சரியான பொருள் என்ன?

கஃபர என்பதன் பொருள்

தொழுகையை விட்டவன் காஃபிர் என்று அவர்கள் முடிவெடுக்க முக்கிய காரணம் கஃபர – குஃப்ர் என்ற வார்த்தைகள் அந்தச் செய்தியில் இடம் பெற்றதுதான். கஃபர – குஃப்ர் எனும் வார்த்தையின் பொருள் இறை நிராகரிப்பு என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதுவல்லாத வேறு அர்த்தத்திலும் இந்த வார்த்தைகள் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது போன்ற இடங்களில் மேற்கண்ட ஃபத்வாவைக் கொடுத்தவர்கள் காஃபிர் என்ற அர்த்தத்தை வழங்குவதில்லை. மாறாக அந்தத் தீமையின் கடுமைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.

அது போன்ற இடங்களில் சில. . .

முஸ்லிமைக் கொலை செய்வது குஃப்ர் என ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (குஃப்ர்) இறை நிராகரிப்பாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூவாயில்

நூல் : புகாரி 48 

தந்தையை வெறுப்பது குஃப்ர் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் காஃபிராவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6768 

பரம்பரையைக் குறை கூறுவது ஒப்பாரி வைப்பது ஆகியவையும் குஃப்ர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடம் உள்ள இரு குணங்கள் (குஃப்ர்) இறை மறுப்பாகும்:

1. பரம்பரையைக் குறை கூறுவது.

2. இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 121

கணவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பதும் குஃப்ர் என்று ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை? எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 1462

இவை அனைத்தையும் குஃப்ர் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலேயே வந்துள்ளது. இவை பெரும் தீமைகள்; கடும் தண்டனைக்குரியவைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் குஃப்ர் என்ற வார்த்தை வந்துள்ளதால் இவற்றைச் செய்பவன் காஃபிராகி விட்டான் என்று சொல்ல முடியுமா?

ஏனெனில் காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரிப்பவன்; அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் என்று பொருளாகும். ஒருவன் பரம்பரையைக் குறை கூறுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, தந்தையை வெறுப்பதாலோ அல்லாஹ்வையும் ரசூலையும் நிராகரித்தவனாக அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாக எப்படி ஆவான்? தண்டனைக்குரிய பாவங்களைச் செய்தவனாகவே ஆவான். இவற்றைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வை நிரகாரித்தவனாக ஆக மாட்டான்.

இவ்விடங்களில் குஃப்ர் என்ற வார்த்தை நன்றி மறத்தல் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போன்றே தொழுகையை விடுவதில் இறைமறுப்பின் சாயல் இருப்பதால் குஃப்ர் என்ற வார்த்தை தொழுகையை விடுவது தொடர்புடைய ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குஃப்ர் என்ற வார்த்தை வரும் அனைத்து இடங்களிலும் இறை நிராகாரிப்பு என்ற பொருள் தான் கொள்ள வேண்டும் எனில் ஒப்பாரி வைப்பவன், தந்தையை வெறுப்பவன், பரம்பரையைக் குறை கூறுபவன் ஆகியவர்களையும் காஃபிர் (அல்லாஹ் ரசூலை நிராகரித்தவன்) என்று சொல்ல வேண்டும். இவர்களுக்கு ஜனாஸா தொழுவிப்பது, திருமணம் செய்விப்பது இவர்கள் அறுத்ததைச் சாப்பிடுவது ஆகியவையும் ஹராம் என்று தீர்ப்பளிக்க வேண்டும். ஏனைய குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் அடிப்படையில் இவ்வாறு சொல்ல இடமில்லை.

எனவே தொழுகையை விட்டவன் காஃபிராகி விட்டான் எனும் ஹதீஸிற்கு இரண்டு வகையான பொருள்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும். தொழுகையை விட்டவன் என்பதற்கு தொழுகையை மறுத்தவன் எனும் பொருள் கொள்ளலாம்.  யார் தொழுகையை மறுத்து புறக்கணிப்பானோ அவன் காஃபிராவான் என்பதில் சந்தேகம் இல்லை. அல்லது விட்டவன் என்பதற்கு தொழாதவன் எனும் பொருள் கொள்ளலாம். அப்படி பொருள் கொண்டால் குஃப்ர் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் இறை நிரகாரிப்புக்கு நெருக்கமான செயல். இறை மறுப்பாளர்களின் குணம் என்று பொருள் செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் மேற்கண்ட செய்திக்கு தொழுகையை விடுவது இறை நிரகாரிப்பாளர்களின் குணமாகும் என்பதாகும். இவ்வாறு நாம் விளக்கம் கொடுப்பதற்குரிய காரணத்தை திரும்பவும் மீள்பதிவு செய்கிறோம்.

காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரித்தவன் அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவன் என்பதாகும். தொழுகையை விடுபவன் அல்லாஹ்வை நிரகாரித்தவனாகவோ, அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகவோ ஆக மாட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(திருக்குர்ஆன் 4:48)

தொழுகையை விடுவதன் தண்டனை

அதே சமயம் தொழுகையை விடுவது ஒரு பெரிய பாவமே அல்ல என்றோ அல்லது தொழுகையை விடுவது சிறிய குற்றம் தான் தொழாவிட்டாலும் எளிதாக சொர்க்கம் சென்று விடலாம் என்றோ எண்ணி விடக் கூடாது. கடமையான தொழுகையை ஒருவர் அலட்சியத்துடன் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். தொழுகையை விடுவது நரகிற்கு அழைத்துச் செல்லும் பாரதூரமான குற்றம் என திருக்குர்ஆன் சொல்கிறது.

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது ஹஎது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் 74:41-43)

மேலும் தொழுகையை விட்டவருக்கு மறுமையில் கடுமையான தண்டனை கிடைப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா (ரலி)

நூல் : புகாரீ 1143

எனவே தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு எனும் குஃப்ர் இல்லை என்பதால் தொழுகையை விடுவதில் அலட்சியமாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed