தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?

 

செய்யலாம்

தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: நஸயீ 1151

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.

இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் 1266

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 832

ஒருவருக்குத் தமிழ் மொழி மட்டும் தெரியுமானால் அவர் தான் விரும்பிய பிரார்த்தனைகளை அந்த மொழியில் தான் செய்ய முடியும். அவரவருக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலே விரும்பிய பிரார்த்தனையைச் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைச் செயல்படுத்த முடியும். எனவே தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்வது தவறல்ல.

குர்ஆனில் இறைவன் கற்றுத்தரும் துஆக்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபு மொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபு மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல.

அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வார்த்தையையும் அப்படியே கூற வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். குர் ஆன் ஹதீஸில் உள்ள துஆக்களை அரபு மொழியில் அதற்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தினால் அந்த துஆக்களை ஓதியதாக ஆகாது.

அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் அரபுமொழியில் இருப்பதால் அதை அப்படியே தொழுகையில் ஓதினால் தான் நாம் இறைவனுடைய வார்த்தைகளைக் கூறியவர்களாக முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகள் அரபு மொழியில் அமைந்துள்ளது. இந்தப் பிரார்த்தனைகளை நபியவர்கள் கூறிய வார்த்தை மாறாமல் அப்படியே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொள்.

பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன்.

எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன்.

என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன்.

உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்).

உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை.

நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்.

நீ அனுப்பிய உன் “நபி’யை நான் நம்பினேன்.”

என்று பிராத்தித்துக் கொள்!

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!

இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். “நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்’ என்ற இடத்தை அடைந்ததும் (“உன் நபியை’ என்பதற்கு பதிலாக) “உன் ரசூலை’ என்று (மாற்றிச்) சொல்லி விட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்” என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

நூல் : புகாரி 247

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed