தொழுகையில் சப்தமிட்டு ஆமீன் கூறுவது கட்டாயமா?

தொழுகையில் கண்டிப்பாக சப்தமிட்டே ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தி எடுத்து வைக்கப்பட்டது.

இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அதா.

நூல்: பைஹகீ (2556), பாகம்: 2 பக்கம்: 59

நபியவர்கள் காலத்தில் நடந்த சம்பவமாகக் கருதியே இது ஆரம்ப காலத்தில் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் இது நபியவர்கள் காலத்தில் நடந்து அல்ல. இது நபியவர்கள் காலத்திற்குப் பின் நடைபெற்ற சம்பவமாகும். நபியவர்களிடமிருந்து வரக்கூடியது தான் மார்க்க ஆதாரமாகும். எனவே மேற்கண்ட செய்தியை நேரடி ஆதாரமாகக் கொள்ள முடியாது.

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.

“இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 782

இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் மேலே நாம் குறிப்பிட்டுள்ள செய்தி ஆதாரமாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம் என்பதே நமது நிலைப்பாடாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed