தொழுகையில் ஓதும் ஆரம்ப துஆ

கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள்.’இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?’ என நான் கேட்டேன். அதற்கு,

அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்’

என்று ஓதுவேன் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

பொருள்:

இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 744

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள்.

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க

பொருள்:

இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி),

நூல்: நஸயீ 887

இந்த ஹதீஸ் முஸ்லிம் 1290லும் இடம் பெற்றுள்ளது.

ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலாயிலாஹ கைருக… என்ற ஸனாவை சிலர் தொழுகையின் ஆரம்ப துஆவாக ஓதி வருகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இதை ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் எதுவும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]