துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை

துஆக்கள் இறைவனிடம் மதிப்பு மிக்கது 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி (3292)

இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.

முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.

 

இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான ”இம்ரான் அல்கத்தான்” என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இவர் உறுதியானவர் இல்லை” என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

 

அல்லாஹ் கோபப்படுகின்றான்?

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3295

மேற்கண்ட செய்தி இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அபூ ஸாலிஹ் அல்ஹவ்சிய்யு” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

 

துன்பம் நீங்கும் வரை பிரார்த்தித்தல் வணக்கங்களில் சிறந்தது

அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ 3494

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஹம்மாத் இப்னு வாகித்” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே ”இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை” என்று விமர்சித்துள்ளார்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]