தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் மட்டும் தான் நின்று தொழக்கூடாதா..?

அல்லது அந்த இமாம் பணி புரியும் பள்ளி வாசலிலேயே தொழக் கூடதா..?

தாயத்து போடக் கூடியவரும் அல்லாவிற்கு இணை வைக்கக் கூடியவர் தானே ..?

யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா

இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை ஒருவர் செய்தால் அவரைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது பற்றி விரிவாக நமது இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் செய்திகளைப் பார்க்கவும்

பித்அத் செய்யும் இமாம்

மவ்லித் ஓதும் இமாம் இணை கற்பிப்பவரா

ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழுவது

இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாமா

இணைவைக்கும் இமாம் ஒரு பள்ளியில் பணிபுரிவதால் அந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக பள்ளியில் இணைவைப்புக் காரியங்கள் அரங்கேறினால் அந்தப் பள்ளிக்குச் செல்லக் கூடாது. அல்லது குறிப்பிட்ட நான்கு தன்மைகள் ஒரு பள்ளியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கும் செல்லக்கூடாது. இது பற்றி ஏற்கனவே நமது இணைய தளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தாயத்து அணிபவரும் அதை மற்றவருக்கு அணிவித்து விடுபவரும் இணைவைப்பவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கயிறுக்கோ, இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகி விடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப் பிரமாணம் வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அஹ்மத் 16781

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிரயாணம் ஒன்றில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பஷீர் (ரலி)

நூல் : புகாரி 3005

யோகாசனத்தைப் பொறுத்த வரை அதில் செய்யப்படும் பயிற்சிகள் சரியானவையாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு முறைகள் நுழைக்கப்படுகின்றன. அதிலுள்ள செயல்கள் இந்து மதத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. எனவே இது போன்ற மத அனுஷ்டானங்களைத் தவிர்த்து, உடற்பயிற்சிக்கான செயல்களை மட்டும் செய்வது தவறில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]