தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?

தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது?

அதில் என்ன சூரா ஓத வேண்டும்?

இரவில் இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர். இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும். இதனால் இரவுத் தொழுகைக்கு வித்ரு என்ற பெயரும் உள்ளது.

இதே தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் (இரவின் கடைசிப் பகுதியில் நிறைவேற்றப்படும் தொழுகை) என்று சொல்லப்படுகின்றது. தஹஜ்ஜத் தொழுகையில் நேரம் மட்டுமே வேறுபடும். தொழும் முறையில் வேறுபாடு இல்லை.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, “இரவுத் தொழுகை எவ்வாறு?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத் தொழுகையை நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக (வித்ராக) ஆக்கிவிடும்” என்றார்கள்.

நூல் : புகாரி 473

இத்தொழுகையை இரவின் இறுதியில் தொழுவது சிறப்பு வாய்ந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1145)

இந்தத் தொழுகையில் குறிப்பிட்ட சூராக்களைத்தான் மட்டும் ஓத வேண்டும் என்று நபிக்ள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே குர்ஆனில் உள்ள சூராக்களில் எதை வேண்டுமானாலும் ஓதிக்கொள்ளலாம்.

குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.

திருக்குர்ஆன் 73 : 20

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed