ஜும்ஆ தொழுகை
வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.
நேரம்
ஜும்ஆ தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.
சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 904
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.
அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424
ஜும்ஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 940
ஜும்ஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1422
ஜும்ஆக்குக் குளிப்பது
ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.
‘உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 894
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397
‘ஜும்ஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)
நூல்: புகாரீ 880
குத்பாவிற்கு முன்பே வருதல்
ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பாகப் பள்ளிக்கு வர வேண்டும்.
‘ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும்,அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416
வியாபாரத்தை விட்டு விடுதல்
ஜும்ஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
அல்குர்ஆன் 62:9
ஜும்ஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
ஜும்ஆ தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2. பெண்கள்3. நோயாளி 4. பயணி
‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 901
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
ஜும்ஆ பாங்கு
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 916
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.
ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.
குத்பாவின் போது பேசக் கூடாது
ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.
‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு’ என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404
ஓத வேண்டிய சூராக்கள்
முஸ்லிம் 1451, 1452, 1453
ஜுமுஆவுடைய சுன்னத்
ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.
ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449
முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக ‘அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!’ என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462
‘உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1457