ஜமாஅத் தொழுகையில் சேர கடைசி வாய்ப்பு எது❓
அது முடிந்தால் ஜமாஅத் முடியும் வரை நிற்க வேண்டுமா❓
இமாம் சலாம் கூறும் வரை ஜமாத் தொழுகையில் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அவர் சலாம் கூறி தொழுகையை முடித்துவிட்டால் அந்த ஜமாஅத் முடிவடைந்து விடும்.
(ஒரு முறை) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலரது சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)
நூல் : புகாரி (635)
முதலவாது ஜமாஅத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்தடுத்து கூட்டாகத் தொழுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்? என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி),
நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596
ஏகத்துவம்