குர்பானிப் பிராணிகள் யாவை ?

ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.

கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். 

(அல்குர்ஆன் 22 : 28)

இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.

ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை. பலியிடப்பட வேண்டிய பிராணிகளை இறைவன் பட்டியலிடும் போது செம்மறியாடு வெள்ளாடு மாடு ஒட்டகம் இவற்றையே குறிப்பிடுகிறான்.

(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா?

அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா?

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!”

என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்?

அல்லது பெண் பிராணிகளையா?

அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா? என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் (6 : 143)

மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.

எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.

சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed