எத்தனை லைலத்துல் கத்ர்❓

எத்தனை லைலத்துல் கத்ர்❓
—————————————

லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி.

ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே❓

எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும்பகல் எப்படி லைலத்துல் கத்ராக,அதாவது கத்ருடைய இரவாக ஆகும்❓

அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.❓

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.

முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே❓

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா❓

பதில் ✅

அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான்.

முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும்.

குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர்.

அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.

அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.

الله اعلم


ஏகத்துவம்