உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?

உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : திர்மிதீ (184)

இதே கருத்து பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்தியிலும் நபிகளார் தொடர்புடையதாக வரும் செய்தி பலவீனமானது என்பதை அந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகளார் கூறியதாக இடம் பெறும் செய்தியில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும் நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.

இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவரை (பொய்யர் என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :10, பக்கம் : 197


உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்ற செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகவும் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள், நபிகளாரின் கூற்றாக வந்த செய்தியை விட நபித்தோழரின் கூற்றாக வந்த செய்தியே சரியானது என்று கூறியுள்ளார்கள். மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார். ஆனால் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே அபூஹுரைரா (ரலி-) அவர்களின் கூற்றாக வரும் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். எனவே இதையும் ஆதாரமாக கொள்ள முடியாது.

பைஹகீ அவர்கள் ஸுனனுல் குப்ரா என்ற நூலில் ஸுஹ்ரீ அவர்களுக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் இடம்பெறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதன் இறுதியில் இந்த தொடர் சரியில்லை என்பதை விளக்கியுள்ளார்கள்.

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்று செய்தி நபிகளாரின் கூற்றாகவும் நபித்தோழர் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே பலவீனமானது என்ற மேற்கண்ட விபரங்களிலிருந்து தெளிவாகிறது. இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்ற இந்த செய்தி நபிகளாரின் கூற்றாக வந்திருப்பதும் நபித்தோழர் கூற்றாக வந்திருப்பதும் பலவீனமானதாகும்.

(புலுகுல் மராம் ஹதீஸ் எண்:198)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed