————————-
உலக வாழ்க்கை❓
————————-
உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.
வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இதற்கு உரிய முறையில் சிறப்பாகப் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 67:2)
இங்கு வாழும் வாய்ப்பு தரப்பட்டதன் நோக்கம், நமது செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று சோதிப்பதற்குத் தான்.
ஒவ்வொரு நபரும் தமது வாழ்வில் நற்காரியங்களைச் செய்கிறாரா? தீமையான காரியங்களைச் செய்கிறாரா
என்று சோதிக்கவே வாழ்க்கை தரப்பட்டுள்ளது. இதோ நபிகளார் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (5292)
மற்றொரு அறிவிப்பில், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு ஆக்கியுள்ளான்) என்று இந்தச் செய்தியில் வந்துள்ளது.
ஒட்டுமொத்த உலகமும் நம்மைச் சோதிக்கவே படைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ், மனிதர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மற்றிக் கொடுத்து சோதிப்பான்;
அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தும் சோதிப்பான். எனவே எல்லா வேளையிலும் அவன் சொன்னபடி சரியாக நடக்க வேண்டும். அப்போது தான் மறுமையில் மகத்தான வெற்றி பெற முடியும்.
————————-
ஏகத்துவம்