உணர்வுகளை புரிந்து செயல்படுவோம்
நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனில், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவும். பிரச்சனைகளை விட்டும் தப்பிக்க முடியும். இதைப் பின்வரும் வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(திருக்குர்ஆன் 6:108)
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவன் அல்லாதவர்களை வணங்கக் கூடாது என்று பிறமத மக்களிடம் சொல்லும் போது கூட, அவர்கள் வணங்கும் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியோ கேவலைப்படுத்தியோ பேசக் கூடாது. அழகிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு பேசினால் நாம் சொல்கிற நல்ல விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்க முன்வர மாட்டார்கள். ஆகவே, எல்லா விஷயத்திலும் மார்க்கம் சொல்லும் வகையில் அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய முறையில் அறிவுரை கூறியுள்ளார்கள். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
நான், அபூதர் கிஃபாரீ (ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்:
நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ம்ஃரூர் இப்னு சுவைத்
நூல்: புகாரி (2545)
ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக அவருடைய தாய் தந்தையரைத் திட்டுவது சரியல்ல. அதனால் அவருடைய மனம் புண்படும், துயரப்படும். இந்தப் புரிதல் இல்லாமல், அடுத்தவர் உணர்வுகளை மதிக்காமல் நடப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.
தனக்குக் கீழ் வேலை செய்பவர்களாக இருந்தாலும், தனது முதலாளியாக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலும் பக்குவமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமாக இருந்தது.
என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்’’ என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீது அல்ல)” என்று கூறினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (5228)
தமது மனைவியின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அவர் இயல்பாக இருக்கிறாரா, கோபத்தில் இருக்கிறாரா என்று புரிந்து கொள்பவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். வாழ்க்கை துணைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவராக இருந்தார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?’’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’’ என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்கு போதுமா?’’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி (950)
பெருநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள். அந்த நாளில் தனது மனைவியின் ஆசையை அறிந்து அதற்குரிய வாய்ப்பை நபியவர்கள் அளிக்கிறார்கள். இப்படியான குணம் கணவருக்கும் இருக்க வேண்டும்; மனைவிக்கும் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் குடும்பத்திற்குள் வரும் பல பிரச்சனைகள் ஆரம்பித்திலேயே முடிவுக்கு வந்துவிடும். இந்தப் பாடம் பின்வரும் சம்பவத்திலும் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்து அனுப்பினார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கி இருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.
உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி),
‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்’’ என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (5225)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முறை வைத்து வெவ்வேறு நாட்களில் தமது மனைவியரின் வீட்டிற்குச் சென்று வந்தார்கள். அவ்வாறு வீட்டில் இருக்கும் போது அவரது இன்னொரு மனைவியிடம் இருந்து உணவுத் தட்டு கொண்டு வரப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்த நபிகளாரின் மனைவி கோபத்தில் அந்தத் தட்டை உடைத்துவிட்டார். அந்தக் கோபத்திற்கு ரோஷம் தான் காரணமென நபியவர்கள் புரிந்து நடந்து கொண்டார்கள்.
இவ்வாறு அண்டைவீட்டார், உறவினர்கள், சக ஊழியர்கள் என்று சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை, இயல்புகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். இதுபோன்று இருந்தால், நமக்கு வீட்டிற்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் சுமூகமான சூழல் நிலவும். இந்தப் பண்பு நபியிடம் இயல்பாகவே இருந்தது.
அபூபக்ர் (ரலி) (ஒரு முறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக் கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) நாள்களில் (ஒன்றாக) இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அபூபக்ர் (ரலி) இரண்டு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, ‘அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்’ என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவில் தங்கும் நாள்களாயிருந்தன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3529)
பண்டிகை தினத்தில் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நபியவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கு நம்மீது இருக்கும் மதிப்பும் நேசமும் கூடும். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள்.
நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரி (631)
மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து மதீனாவிற்கு இளைஞர்கள் வருகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென விரும்புவதை உணர்ந்த நபியவர்கள், அவர்களுக்கு முக்கியமான மார்க்க விஷயங்களை எடுத்துக் கூறி ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களின் உணர்வையும் சூழ்நிலை யையும் கருத்தில் கொண்டு நபிகளார் நடந்து கொண்டதில் நாமெல்லாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதோ இதுபோல இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், “நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன். அங்கு ஒரு ‘வீட்டை’ அல்லது ‘மாளிகையைக்’ கண்டேன். “இது யாருக்குரியது?” என்று கேட்டேன்.
அவர்கள் (வானவர்கள்), “(இது) உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.
ஆனால், (உமரே!) உமது தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. (ஆகவே, உள்ளே செல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா தன்மானத்தைக் காட்டுவது?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4766)
உமர் (ரலி) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுள் ஒருவர். அவர் சின்னச்சின்ன விஷயத்திலும் ரோஷத்தோடு நடந்து கொள்பவராக இருந்தார். அவரின் இந்த சுபாவத்தை நபியவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இப்படி, சமூகத்தில் எல்லோரும் பலவிதமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். வெவ்வேறு வகையான சூழலில் மனநிலையில் இருப்பார்கள்.
சிலர் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்; சின்ன விஷயத்திலும் சிலருக்கு கோபம் வரும். சிலர் எதிலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள். இந்நிலையில் சுற்றியுள்ள மக்களின் இயல்புகளை அறிந்து மார்க்கம் அனுமதி அளித்த அடிப்படையில் நடக்கும் போது சுமூகமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். இதற்குரிய முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடம் நமக்கு இருக்கிறது.