இஸ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

இல்லை.

இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்றனர்.

இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.

ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும்.

நூல் : திர்மிதி 535

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளிலால் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

யஹ்யா பின் முயீன், நஸாயீ, யஃகூப் பின் சுஃப்யான், இப்னு ஹிப்பான், இப்னு அதீ, அபூதாவூத், ஹாகிம் ஆகியோர் இவரைப் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இந்த செய்தி பலவீனம் என்பது உறுதியாகின்றது. இது தவிர, ஏராளளமான செய்திகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவை. எனவே இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

 

அதே நேரத்தில் ஒருவர் சூரியன் உதித்த பிறகு உபரியாகத் தொழ நாடினால் இதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை. மற்ற நேரங்களில் உபரியான வணக்கங்களைத் தொழுதால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை சூரியன் உதித்த பிறகு நிறைவேற்றப்படும் தொழுகைக்கும் கிடைக்கும். இந்நேரத்தில் தொழப்படும் தொழுகைக்கு பிரத்யேகமாக எந்தச் சிறப்பும் இல்லை. மாறாக தொழுவதற்கு அனுமதி மட்டுமே இருக்கின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]