குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்” என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.
ஆனால் இதன் பொருள் பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது அல்ல. மாறாக குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குறிப்பிட்ட வணக்கம் என்ன என்பது குர்ஆனில் கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்தபோது நான் அவர்களை அடைந்தேன். நஜ்து பகுதியில் இருந்து வந்திருந்த ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹஜ் பற்றி ஒருவரைக் கேட்கச் செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹஜ் என்பது அரஃபா தான். யார் முஸ்தலிபாவுக்கு பஜ்ரு தொழுகைக்கு முன் வந்து விட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார். மினாவின் நாட்கள் மூன்றாகும். யார் இரண்டு நாட்களில் அவசரமாகச் செல்கிறாரோ அவர் மீது குற்றம் இல்லை. யார் தாமதமாகச் செல்கிறாரோ அவர் மீதும் குற்றம் இல்லை” என்று கூறி விட்டு இதை மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒருவரை அனுப்பினார்கள்.
நூல் : நஸாயீ 2994
“குறிப்பிட்ட இடத்தில் கல் எறிதல்” என்ற வணக்கத்தைத்தான் இந்த வசனம் குறிக்கிறது என்று இந்த ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பது எதைக் குறிக்கிறது என்பதைக் குர்ஆனிலிருந்து விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டதால் அதுவே போதுமானதாகும். குர்ஆனைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் மார்க்கச் சான்றாகும்.