இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது?

இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா?

இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியூர் செல்லும் போது இதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்போது நாம் இணைகற்பிக்காத இமாமை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

ஜும்மா தொழுகையை எப்படி நிறைவேற்றுவது?

 

இஸ்லாத்தின் எல்லாச் சட்டங்களுமே வெளிப்படையாகத் தெரியும் போது அமுல்படுத்தத் தக்கதாகும். ஒருவர் இணைகற்பிப்பவர் என்பது நமக்குத் தெரிய வந்தால் அப்போது அவரைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்குத் தெரியாவிட்டால் முஸ்லிம் இணைகற்பிக்க மாட்டார் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும். வெளிப்படையாகத் தெரியாத வரை எவரைப் பற்றியும் தப்பான எண்ணம் கொள்ளக் கூடாது என்பது தான் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் வழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

நூல் : புகாரி 5143

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி).

அப்போது நபித் தோழர்களில் ஒருவர், இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தான் என்று கூறினார். இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க,

என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும், மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்று கூறினார்.

உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்? என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.

அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம் என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், எத்தனையோ தொழுகையாளிகள் தம் உள்ளத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

மக்களின் உள்ளங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை என்று கூறி விட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது.

அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆதுகூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

நூல் : புகாரி 4351

எனவே நீங்கள் வெளியூர் செல்லும் போது அங்குள்ள இமாம் இணைகற்பிப்பவர் என்று ஆதாரத்துடன் சொல்லப்பட்டால், அல்லது நம்பகமான இருவர் சொன்னால் அவரைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும். ஜும்மா தொழ முடியாத நிலை ஏற்பட்டால் லுஹர் தொழுது கொள்ளுங்கள்.

அவரைப் பற்றி அப்படி ஒரு தகவல் உங்களுக்குச் சொல்லப்படாவிட்டால் அவர் இணைகற்பிப்பவர் அல்ல என்று நல்லெண்ணம் வைத்து அவரைப் பின்பற்றி தொழுங்கள்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]