•••••••••••••••••••••••••
ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….
••••••••••••••••••••••••••
ஸாரா (அலை) அவர்கள்இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் (அலை) அவர்களோடு காலத்திற்கேற்ப ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று வாழும் நிலை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கு சாரா (அலை) அவர்களும் சென்று வாழ்ந்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களும் ஸாரா (அலை) அவர்களும் எகிப்தில் பயணம் செய்த போது அங்கு கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அழகான பெண்களை அவன் அபகரித்துக் கொள்வான் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறப்பட்டது.

புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்க நலன் காக்கும்) விஷயத்தில் பேசியதாகும்.

அவை:

  1. (மக்கள் அவரைத் திருவிழாவிற்கு அழைத்த போது) “நான் நோயுற்றிருக்கின்றேன்” என்று கூறியதும்,
  2. (சிலைகளை உடைத்து விட்டு, மக்களிடம்) இவற்றில் பெரிய சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும்.
  3. ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும், சாரா அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனது வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம், இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்; அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினான்.

அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார்? என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், என் சகோதரி” என்று பதிலளித்தார்கள்.

பிறகு சாராவிடம் சென்று, சாராவே! பூமியின் மேல் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையுடையவர் எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நீ என் சகோதரி என்று நான் அவனுக்குத் தெரிவித்து விட்டேன்.

ஆகவே நீ என்னைப் பொய்யனாக்கி விடாதே!” என்று கூறினார்கள்.

அந்த மன்னன் ஸாரா அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். ஸாரா அவர்கள் அவனிடம் சென்ற போது, அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் தண்டிக்கப்பட்டான்.

“அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான்.

உடனே ஸாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப் பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான்.

அப்போது அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான்.

உடனே ஸாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான்.

பிறகு ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஸாரா அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முடியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப் பெண்ணாக அளித்தான்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3358

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார் என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை மன்னன் அழைத்து வரச் செய்து,

இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், என் சகோதரி என்று சொன்னார்கள்.

பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறை நம்பிக்கை கொண்டவர் யாரும் இல்லை என்று சொன்னார்கள்.

பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்து வந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பு நோயால்) கால்களை உதைத்துக் கொண்டான்.

மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்குத் திரும்பி, மீண்டும் ஸாராவை நெருங்கினான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களை உதைத்துக் கொண்டான்.

மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று பிரார்த்தித்தார். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி இருக்கின்றீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு ஹாஜரைக் கொடுத்து விடுங்கள்” என்று மன்னன் சொன்னான். ஸாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2217 முஸ்லிம் 4371

அநதப் பணிப்பெண் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இன்னொரு துணைவியார் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள்.

பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீன் பயணமானார்கள். கணவன் மனைவியாக வாழ்ந்து, கிழட்டுத் தன்மையை அடைந்த இப்ராஹீம் நபியும் சாராவும் குழந்தையின்மையை நினைத்து விரக்தியின் உச்சக்கட்டத்தை அடைந்த போது அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட நாடினான்.

ஓரினச் சேர்க்கையை விரும்பிய லூத்தின் கூட்டத்தினரை அழிப்பதற்கு அனுப்பிய அதே வானவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களிடமும் சாராவிடமும் அனுப்பி, அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்குமென்ற நற்செய்தியைச் சொல்லி வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.

கிழவியான பிறகு குழந்தை பெற முடியாது; இளமையானவர்கள் தான் பெற முடியும் என்ற மக்கள் கூற்றை அல்லாஹ் பொய்யாக்கினான். மலக்குகள் அந்நிய மனிதர்கள் தோற்றத்தில் இப்ராஹீமைச் சந்திக்க வந்து சலாம் உரைத்தனர். பதிலளித்த இப்ராஹீம் நபியவர்கள் வந்தவர்களில் எவரையும் விசாரித்துக் கொள்ளாமல் விருந்துபசாரம் செய்தார்கள்.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியை தாமதமின்றிக் கொண்டு வந்தார். (அல்குர்ஆன் 11:69)

இப்ராஹீம் அவர்களைச் சாப்பிடும்படி வேண்டினார்கள். அவர்கள் மலக்குகளாயிருந்த காரணத்தால் சாப்பிடாமல் இருந்தனர். இதைக் கண்ட இப்ராஹீம் அவர்கள் நமக்கு ஏதும் தீங்கு செய்ய வந்திருப்பார்களோ அல்லது இவர்களை வரவேற்பதில் குறை ஏற்படுத்தி விட்டோமோ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர் களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப் பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:70)

“அவ்வூரார் அநியாயக் காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்” என்றனர். (அல்குர்ஆன் 29:31)

லூத் கூட்டத்தாரின் அழிவுச் செய்தி கேட்ட இப்ராஹீம் லூத் (அலை) அவர்களைப் பற்றியும், அவர்களை நமபியவர்களைப் பற்றியும் கவலை அடைந்தார்கள். மனிதனின் இயற்கை நிலை மாறியதை எண்ணி வேதனைப் பட்டார்கள் ஆனால் சாராவோ பாவிகளின் அழிவுச் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

சாராவின் மனம் குளிரும் ஆண் குழந்தை பிறப்புச் செய்தியை அறிவித்த மலக்குகள் அக்குழந்தையின் பெயர் இஸ்ஹாக் என்றும் அவருக்குப் பிறக்கும் குழந்தையின் பெயர் யஃகூப் என்றும் கூறினார்கள்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (அல்குர்ஆன் 11:71)

சாராவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் அதை மறைத்துக் கொண்டு, “இது எப்படி சாத்தியம்?” எனக் கேட்டார்.

“இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:72)

எனினும் மனிதர்களின் எஜமானனும் அனைத்து ஆதிக்கத்திற்கும் சொந்தகாரனுமான அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண் களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49.50)

உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, “நான் மலட்டுக் கிழவியாயிற்றே” என்றார். அதற்கவர்கள் “அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்” என்றனர். (அல்குர்ஆன் 51:29,30)

இது வல்ல நாயன் ரப்புல் ஆலமீனுக்குப் பெரிய காரியமே இல்லை. அவன் ஒன்றைச் செய்ய நாடினால் “ஆகு’ என்றால் ஆகிவிடும்.

பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் பரிசாக இப்ராஹீம் சாரா தம்பதியினருக்கு, இஸ்ஹாக் என்ற குழந்தையை வழங்கி, தான் நினைத்தால் எதையும் சாதிக்க வல்லவன்; ஆக்கவும் அழிக்கவும் சக்தி மிக்கவன் என்பதை உலக மக்களுக்கு உணர்த்திக் காட்டினான்.

தியாகக்தின் உருவமான இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியான சாரா (அலை) அவர்களும் சாடிக்கு ஏற்ற மூடியைப் போல பொறுமையின் சொரூபமாய் திகழ்ந்தார்கள். தள்ளாத வயதிலும் கணவனின் பொருத்தத்தைப் பேணி நல்ல மனையாளிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.

கணவனைப் பொருந்தி வாழ்ந்த காரணத்தால் தள்ளாத வயதிலும் அன்பு செரிந்த வாழ்வை மேற்கொண்டதால் அல்லாஹ் அவர்களுக்கு மலடான நிலையிலும் குழந்தை இஸ்ஹாக் (அலை) அவர்களை அருள் பாக்கியமாகத் தந்தான். மேலும் பின்பு வந்த அவர்களின் சந்ததியில் யஃகூப் என்ற நபியையும் பின்னால் ஒரு பெரும் இறைத் தூதர்கள் சந்ததிக்கு அவர்களைத் தாயாகவும் ஆக்கினான்.

இறைவனைப் பயந்து, இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகக்துவத்தை ஏற்று, அவர்களுடன் இனிய முறையில் வாழ்ந்து வந்தார்கள்.

“அல்லாஹ்வையே (தவக்கல் வைத்துச்) சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்” என அல்லாஹ் தன் குர்ஆனில் (65:3) கூறுகிறான். இந்த வகையில் சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக தவக்கல் வைத்த காரணத்தால் கொடுங்கோலனான அந்த அரசன் அவரை நெருங்க இயலவில்லை. அதே நேரம் இப்ராஹீம் (அலை) அவர்களும் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து கொண்டிருந்தார்கள். இதுவும் அல்லாஹ் கூறும் நடைமுறை தான்.

“நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” என அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் (2:153) கூறுகிறான்.

நமக்கு ஏதேனும் துன்பம், துயரம், இன்னல், இடையூறுகள் ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப வேண்டும்; அவனிடமே கேட்க வேண்டும்; உதவியும் தேட வேண்டும்.

குழந்தையில்லையா? இன்னபிற குறைகளா? எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. வேறு யாரிடமும் எதனிடமும் நாட்டம் கூட வைத்திடக் கூடாது. பொறுமையாக இருந்து அல்லாஹ்விடமே உதவி தேட வேண்டும்.

சாரா அவர்களுக்குக் குழந்தை இல்லாத வேளையிலும் கணவனைக் குத்திப் பேசவோ அல்லாஹ்வை பழித்துப் பேசவோ இல்லை. அல்லாஹ் அல்லாத யாரிடமும் கேட்கவுமில்லை. அல்லாஹ்வின் அருள் வாக்கான, “வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49,50) என்ற சிந்தை அவர்களிடமிருந்தது.

அல்லாஹ் நமக்குத் தராத அருட்கொடையைப் பற்றி கவலைப் படாமல் பொறுமையுடன் இருக்கும் போது அல்லாஹ் அறியாத புறத்திலிருந்து பல அருள் வளங்களை வாரி வாரி வழங்குவான். மலடியான, கிழவியான சாராவுக்கு அந்தப் பருவத்திலும் குழந்தையைக் கொடுத்து பனூ இஸ்ராயீல்களில் உள்ள நபிமார்களுக்குத் தாயாய் ஆகும் பேற்றை வழங்கினான் அல்லாஹ்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed