*மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது?…*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை *நபித்தோழர்களிடம் கேட்ட போது எந்தளவுக்கு அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள்* என்பதை விளக்கும் ஹதீஸ்…..
——————————————
நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். *அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.*

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “*மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்”* எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,

அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “*நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்*” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது “(*உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்*“ என்று கூறி, “*பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்*’’ என்று வலியுறுத்தினார்கள்.

*உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.*

அப்போது *அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை.*

பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். *இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்.*

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது *முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது*. அவ்வாறே,

*யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு*” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம்1848
_____________________________

*வறுமையில் வாடித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு, தான தர்மங்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.*

அப்போது அல்லாஹ்வின் வசனங்களை நினைவூட்டுகிறார்கள். அதில், மறுமைக்கான என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு நபித்தோழர்கள் அளப்பரிய உதவியை செய்தார்கள்; அள்ளிக் கொடுத்தார்கள்.

தர்மம் செய்வது மட்டுமல்ல வணக்க வழிபாடுகள், கடமைகள், பொறுப்புகள், பிறர் நலம் நாடும் செயல்கள் என்று எதுவாயினும் அதைத் திறம்பட செய்வதற்கு மறுமை சிந்தனை அவசியம். மறுமைக்காக என்ன செய்துள்ளோம் என்ற உணர்வு நம்மை மார்க்க விசயத்தில் என்றும் உயிர்ப்போடும் விழிப்போடும் வைத்திருக்கட்டும் *இன்ஷா அல்லாஹ்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed