மனிதர்களில் சிறந்தவர்கள்–மனவலிமை கொண்டவர்கள்

அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். அவனது அனுமதி இன்றி எந்தவொரு துன்பமும் சிக்கலும் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கையாளர்கள், எந்தவொரு பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு விடாமல் தளர்ந்து விடாமல் படைத்தவனின் மீது ஆதரவு வைத்து செயல்படுவார்கள். எனவே, நமது வாழ்வில் நடந்து முடிந்த துன்பத்தை நினைத்து கவலையில் வீழ்ந்துவிடாமல் மன வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எல்லா நிலையிலும் மனதளவிலும் செயலளவிலும் உறுதியாக வலிமையாக இருப்பதற்கு இன்றே சபதம் ஏற்போமாக.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) “லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5178

தங்கள் மீது நல்ல கண்ணோட்டம் கொண்டிருக்கும் மக்களிடம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை அவர்களுக்கு தோதுவாக மாற்றிக் கொள்ளும் மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதற்காக மார்க்கத்திற்கு மாற்றாமாக அவர்கள் விரும்பும் காரியங்களையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். இத்தகையவர்கள் இதன் மூலம் இவ்வாறு ஒரு சில மனிதர்களிடம் பாராட்டினைப் பெறலாம். அதேநேரம், இதற்காக இவர்கள் செய்யும் தீமையான அநியாயமான மோசமான காரியங்களின் காரணத்தால் மறுமையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் முன்னிலையில் பழிப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாவார்கள்.

எனவே, மார்க்கம் கூறும் செயல்களைச் செய்வதில்தான் உண்மையான சிறப்பு இருக்கிறது. இதன் மூலம் மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் ஈருலகிலும் அங்கீகரிக்கும் சிறந்தவர்கள் எனும் பாராட்டும் பாக்கியமும் கிடைக்கும். இதை உணர்ந்து நன்முறையில் வாழ்வோமாக.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed