புகாரியின் மூலப் பிரதி குறித்த விமர்சனங்களும் விளக்கங்களும்

எம்.ஐ.சுலைமான்

நபிமொழிகளின் மீதும் அதைத் தொகுத்தவர்கள் மீதும் பல காலங்களாகக் கடும் விமர்சனங்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் வைக்கப்பட்டு வந்துள்ளது. அல்லாஹ்வின் பேரருளால் அந்தந்தக் கால அறிஞர்கள் அறிவுப்பூர்வமாகவும்  ஆதாரத்துடனும் அதை உடைத்தெறிந்து வந்துள்ளனர்.

இதில் முக்கியமாக, ஸஹீஹுல் புகாரியில் இடம்பெறும் செய்திகளின் நம்பகத்தன்மையில் இதுபோன்ற ஐயத்தை ஏற்படுத்துவர்கள் குறிப்பாக ஷியாக்கள் ஆவர்.

புகாரியின் அறிவிப்புகள் நம்பகத்தன்மை அற்றவை என்றும், அதற்குரிய ஆதாரமாக புகாரி இமாம் எழுதிய மூலப்பிரதி தற்போது கிடையாது என்றும் வாதிடுகின்றனர்.

தற்போது உள்ள புகாரி பிற்காலத்தில் உள்ளவர்களால் எழுதப்பட்டது என்றும் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனம் சரியா என்பதைக் காண்போம்.

மூலப்பிரதி

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பான்மையான நூல்களின் மூலப்பிரதிகள் தற்போது எங்கும் கிடைப்பதில்லை. அதனால் அந்த நூல்கள் பொய்யானவை என்று சொல்லிவிட முடியாது. யாரும் இந்தக் காரணத்தை வைத்து இவ்வாறு சொல்லவும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த கால சூழ்நிலை அப்படி!

எழுது கோல், எழுதுவதற்குரிய பேப்பர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. முக்கியமாக, அதைப் பாதுகாப்பதற்குரிய வசதிகள் இல்லை. இதனால் பெரும்பாலான நூல்களின் மூலப் பிரதிகள் கிடைப்பதில்லை.

எனவே அந்தக் காலங்களில் செய்திகளை மனன முறையில் தான் பாதுகாத்து வந்துள்ளனர். திருக்குர்ஆனைக் கூட அல்லாஹ் இவ்வாறுதான் பாதுகாப்பதாகச் சொல்கிறான்.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. 

(அல்குர்ஆன் 29:49)

அன்றைய காலத்தில் ஒரு ஆசிரியரிடம் பாடம் பயிலும் மாணவர், ஆசிரியர் சொல்லும் செய்திகளை மனனம் செய்து கொள்வார். அதைச் சரிபார்க்க மாணவர் மனனமிட்டதை ஆசிரியரிடம் சொல்லிக் காட்டுவார். அதை ஆசிரியர் சரி பார்ப்பார். அல்லது ஆசிரியர் அந்த செய்திகளைச் சொல்வார். அதை மாணவர் சரியா என கவனிப்பார். ஒரு சிலர் எழுதியும் கொள்வர்.

அன்றைய காலத்தில் எழுத்து வடிவங்கள் ஒழுங்குற அமையாததாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதுவதாலும் எழுத்து வடிங்களில் பாதுகாப்பது சிரமமாக இருந்தது.

ஒரு ஆசிரியரின் நூலிலிருந்து ஒருவர் செய்திகளை அறிவித்தால் அவர் அந்த ஆசிரியரின் எழுத்து வடிவங்களை அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது விதி.

تدريب الراوي – (2 / 57(

ثم يكفي ) في الرواية بالكتابة ( معرفته ) أي المكتوب له ( خط الكاتب(

எழுதிக் கொள்பவர் எழுதியவரின் எழுத்துமுறை அறிந்திருக்க வேண்டும்.

(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 2, பக்கம் 57))

எழுத்து வடிவங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிந்திருந்ததால் தான் இந்த விதியை அறிஞர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

அன்றைய காலத்தின் வழிமுறைகள் பெரும்பாலும் மனனம் மூலமே வந்துள்ளது. நாளடைவில் எழுத்து வடிவிலும் நூல்கள் உருப்பெற்றன.

எனவே மனன முறையில் ஆதாரப்பூர்வமான நபர்கள் மூலம் வந்திருந்தால் அதையும் நாம் ஏற்கலாம்.

புகாரி இமாம் எழுதி வைத்திருந்தார்களா?

இமாம் புகாரி அவர்கள் ஸஹீஹுல் புகாரி என்ற நூலை எழுதித்தான் வைத்திருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த புகாரியைத் தன் மாணவர்களுக்கும் அதை மனனம் செய்ய வைத்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமான மாணவர்கள் ஸஹீஹுல் புகாரியைப் படித்தும் உள்ளனர்.

تاريخ بغداد – (2 / 9)

أخبرنا القاضي أبو بكر احمد بن الحسن الحيري بنيسابور قال سمعت أبا إسحاق إبراهيم بن احمد الفقيه البلخي يقول سمعت أبا العباس احمد بن عبد الله الصفار البلخي يقول سمعت أبا إسحاق المستملى يروى عن محمد بن يوسف الفربري انه كان يقول سمع كتاب الصحيح لمحمد بن إسماعيل تسعون ألف رجل

ஸஹீஹுல் புகாரியை, இமாம் புகாரியிடமிருந்து செவியுற்றவர்கள் 90,000 நபர்கள் என்று புகாரியின் இமாமின் முக்கிய மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ குறிப்பிடுகிறார்.

(நூல்: தாரீக் பக்தாத், பாகம் 2, பக்கம் 9)

முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்ற மாணவரிடத்தில் இமாம் புகாரியின் அசல் பிரதி இருந்துள்ளது.

التعديل والتجريح , لمن خرج له البخاري في الجامع الصحيح ـ تح أحمد لبزار – (1 / 287)

وقد أخبرنا أبو ذر عبد بن أحمد الهروي الحافظ رحمه الله حدثنا أبو إسحاق المستملي إبراهيم بن أحمد قال انتسخت كتاب البخاري من أصله كان عند محمد بن يوسف الفربري فرأيته لم يتم بعد وقد بقيت عليه مواضع مبيضة كثيرة منها تراجم لم يثبت بعدها شيئا ومنها أحاديث لم يترجم عليها فأضفنا بعض ذلك إلى بعض

முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ அவர்களிடம் இருந்த புகாரியின் அசல் பிரதியிலிருந்து நான் நகல் எடுத்தேன். அதில் பல இடங்களில் வெண்மையாக (ஒன்றும் குறிப்பிடாமல் இருந்தது) சில இடத்தில் தலைப்பிட்டிருந்தது. அதற்குப் பிறகு எந்த ஒரு செய்தியும் இல்லை. சில ஹதீஸ்கள் இருந்தன. அதற்கு எந்தத் தலைப்பும் குறிப்பிடாமல் இருந்து. எனவே நாங்கள் சிலதை சிலதுடன் இணைத்துக் கொண்டோம் என்று அபூஇஸ்ஹாக் அல்முஸ்தம்லீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(நூல்: அத்தஃதீல் வத்தஜ்ரீஹ்,

பாகம் 1, பக்கம் 287)

புகாரியை அறிவித்தவர்கள்

ஸஹீஹுல் புகாரி ஹதீஸை இமாம் புகாரி யிடமிருந்து செவியுற்று, ஆறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வுலகத்திற்கு அறிவித்துள்ளார்கள்.

الفتح – (1 / 492)

وذكر الفربري أنه سمعه منه تسعون ألفا وأنه لم يبق من يرويه غيره وأطلق ذلك بناء على ما في علمه وقد تأخر بعده بتسع سنين أبو طلحة منصور بن محمد بن علي بن قريبة البزدوي وكانت وفاته سنة تسع وعشرين وثلمائة ذكر ذلك من كونه روى الجامع الصحيح عن البخاري أبو نصر بن ماكولا وغيره ومن رواة الجامع أيضا ممن اتصلت لنا روايته بالإجازة إبراهيم بن معقل النسفي وفاته منه قطعة من آخره رواها بالإجازة وكذلك حماد بن شاكر النسويஞ் ذكره الخليلي في الإرشاد وأن مهيب بن سليم رواه عنه

புகாரி இமாமிடமிருந்து ஸஹீஹுல் புகாரி ஹதீஸை அறிவித்தவர்கள் அல்ஃபரப்ரீ, அபூதல்ஹா மன்சூர் பின் முஹம்மத் பின் அலீ அல்பஸ்தவீ, இப்ராஹீம் பின் மஃகில் அந்நஸஃபீ, ஹம்மாத் பின் ஸாகிர், மஹீப் பின் சுலைம் ஆகியோர்.

(கருத்து – பத்ஹுல்பாரி முன்னுரை,

பாகம் 1, பக்கம் 492)

سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] – (23 / 390)

وَقَالَ مُحَمَّدُ بنُ طَاهِرٍ المَقْدِسِيُّ: رَوَى (صَحِيْحَ) البُخَارِيِّ جَمَاعَةٌ، مِنْهُم: الفرَبْرِيُّ، وَحَمَّادُ بنُ شَاكِرٍ، وَإِبْرَاهِيْمُ بنَ مَعْقِلٍ، وَطَاهرُ بنُ مُحَمَّدِ بنِ مَخْلَدٍ النَّسَفِيَان.

ஸஹீஹுல் புகாரியை அறிவித்தவர்கள் ஒரு கூட்டத்தினர். அவர்களில் அல்ஃபரப்ரீ, ஹம்மாத் பின் ஷாக்கிர், இப்ராஹீம் பின் மஃகில், தாஹிர் முஹம்மத் பின் முகல்லத் ஆகியோரும் அடங்குவர்.

(நூல்: ஸியரு அஃலாமுந் நுபலா,பாகம் 23, பக்கம் 390)

புகாரியை அறிவித்தவர்களில் முக்கியமான ஆறு நபர்கள் இவர்கள்தான்.

  1. முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ
  2. இப்ராஹீம் பின் மஃகில் அந்நஸஃபீ
  3. ஹம்மாத் பின் ஸாகிர்
  4. தாஹிர் பின் முஹம்மத் பின் முகல்லத் அந்நஸஃபீ
  5. அபூதல்ஹா மன்சூர் பின் முஹம்மத் பின் அலீ அல்பஸ்தவீ
  6. மஹீப் பின் சுலைம்

இவர்களிடமிருந்து அவர்களின் ஏராளமான மாணவர்கள் புகாரியை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது இமாம் புகாரியின் மூலப்பிரதி இல்லாவிட்டாலும் அவர்களின் நூல்களிலிருந்து பிரதி எடுத்தவர்கள், அவர்களிடம் மனனம் செய்து எழுதியவர்களின் மூலப்பிரதிகள் உள்ளன.

அறிவிப்பில் உள்ள குறை நிறைகள்

புகாரி இமாமிடமிருந்து அறிவித்த மாணவர்களின் பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும், வாசக மாற்றங்களும் இருந்துள்ளன. இவை மிகக் குறைவானதே. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இதுபற்றி விரிவாக இன்ஷா அல்லாஹ் வரும் தொடரில் விளக்குவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed