தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும். அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள்.

இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும்.

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

நபியவர்களின் முன்மாதிரி

நபி (ஸல்) அவர்கள் பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் தங்களுடைய வேலைகளை யெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தொழுகைக்காக பள்ளியை நோக்கி விரைந்து விடுவார்கள்.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.  (நூல்: புகாரி 5363)

முந்தி வருவதே மிகச் சிறந்தது

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே தயாராவதால் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ் நம்முடைய கண்களுக்குக் காட்டவில்லை. அவ்வாறு காட்டினால் அதனை அடைவதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடக்கூடிய நிலை உருவாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:  புகாரி (615)

இப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை தொழுகையாளிகள் தான் பெறமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழுகையைப் பேணாதவர்கள் ஒருபோதும் இது போன்ற நற்பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியாது.

பள்ளியை நோக்கும் உள்ளமும் – அர்ஷின் நிழலும்

மறுமை நாளின் வெப்பத்தின் கொடுமை மிகக் கடுமையானதாகும். அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் அந்நாளில் இருக்காது. அப்போது பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தை உடையவர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அர்ஷின் கீழ் நிழல் கொடுக்கின்றான்.

ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்கூட்டியே பள்ளிவாசலுக்கு வருவது அவரை இத்தகைய பாக்கியத்தைப் பெறக்கூடியவராக ஆக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்: 

1. நீதி மிக்க ஆட்சியாளர். 

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.

 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.

 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர். 

 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்:  புகாரி (660)

முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்

நூல்: முஸ்லிம் (1869)

முன்கூட்டி வருவது நிதானத்தைப் பெற்றுத் தரும்

தொழுகைக்கு மிக மிக முக்கியமானது நிதானமாகும். இதனை நபியவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச் செல்லாதீர்கள்நடந்தே செல்லுங்கள்நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் (1053)

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் நாம் அமைதியாகவும், நிதானமாகவும் தொழுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். சில சகோதரர்கள் தாமதமாக வருவதால் இமாம் ஜமாஅத்தை அடைவதற்காக வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க ஓடிவந்து தொழுகையில் இணைகின்றனர். இது தொழுகைக்கு இருக்க வேண்டிய அமைதியையும், நிதானத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகின்றது. தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இதுபோன்ற நிலைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளலாம்.

முன்கூட்டி வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

  • நபியவர்கள் பாங்கு சொன்னவுடன் வீட்டிலிருந்து தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற ஹதீஸின் மூலம் இது மிகச் சிறந்த நற்செயல் என்பதை நாம் அறிகிறோம்.
  • தொழுகைக்கு ஆரம்ப வேளையில் வருவதன் நன்மைகளை மக்கள் அறிந்தால் அந்த நன்மைகளை அடைவதற்குப் போட்டியிடுவார்கள்.
  • தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தைப் பெற்றவராகிவிடுகிறார். இதன் காரணமாக மறுமையில் அர்ஷின் நிழலைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.
  • தொழுகையில் நிதானம், அமைதி மிகவும் அவசியமாகும். முன்கூட்டியே வருவதன் மூலம் இதனை நாம் அடைந்து கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed