சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன?

மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றினால் நன்மை. நிறைவேற்றாமல் விட்டால் குற்றமாகும்.

கடமையல்லாத மேலதிக வணக்கங்களாக சுன்னத் மற்றும் நஃபிலான அமல்களை மார்க்கம் சொல்லித் தருகிறது. இவற்றை செய்யாமல் விட்டால் குற்றம் கிடையாது. அதே சமயம் அதை நிறைவேற்றினால் இறைவனிடம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இறை நெருக்கத்தை பெற்றுத் தரும்

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

என் அடியான் கூடுதலான வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசிக்கும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன்.

ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6502

கடமையான வணக்கங்களின் குறையை சரி செய்யும்

ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு (சுன்னத நஃபில் போன்ற)உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள்.

பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 16665

தொழுகை மட்டுமல்லாமல் சுன்னத்தான நோன்பு, தர்மம் என்று இருக்ககூடிய சுன்னத்தான வணக்கங்கள் அனைத்தும் அதுசார்ந்த கடமையின் குறைகளுக்கு ஈடாகிறது.

இவ்வாறு பொதுவாக மட்டுமல்லாமல் சுன்னத்தான தொழுகை, நோன்பு என்று குறிப்பிட்ட சுன்னத்தான அமல்களுக்கென்று குறிப்பிட்ட கூலிகளையும் மார்க்கம் சொல்லித் தருகிறது.

சொர்க்கத்தில் வீடு

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா(ரலி)

நூல்: முஸ்லிம் 1319

உலகை விட சிறந்தது

ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1314

இரவுத் தொழுகையும் தர்மமும் சுவனத்தை பெற்றுத் தரும்

நமது வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் ஸஜ்தாவில் விழுந்து, தமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவோரே அவற்றை நம்பியவர்கள். அவர்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.

அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டு விலகிவிடும். அவர்கள் அச்சத்துடனும், ஆவலுடனும் தமது இறைவனைப் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (நல்ல) செயல்களுக்குக் கூலியாக, அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை யாரும் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 32: 15 – 17

சுன்னத்தான நோன்பும் பாவமன்னிப்பும்

பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2151

இப்படி சுன்னத்தான வணக்க வழிபாடுகள் தொடர்பான ஏராளமான நன்மைகள் மார்க்கத்தில் பொதுவாகவும் குறிப்பிட்டும் கூறப்பட்டுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed