கடுமையான வேதனை

இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.

அவர்களுக்கு (தீயவர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.
அல்குர்ஆன் (13 : 34)

எனது வேதனை தான் துன்புறுத்தும் வேதனை. அல்குர்ஆன் (15 : 50)

அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
அல்குர்ஆன் (22 : 2)

மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
அல்குர்ஆன் (20 : 127)

மறுமையின் வேதனை மிகவும் இழிவு படுத்தக் கூடியது.
அல்குர்ஆன் (41 : 16)

மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் (68 : 33)

வேதனையால் அலறுகிறார்கள்

தீயவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.

அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறு தான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்து வந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், நான் (அறிவேன்)” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர் என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன் என்று கூறினார்கள்.

பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள் என்றார்கள். மக்கள், நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம் என்று கூறினர்.
பிறகு மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள் என்றார்கள். மக்கள், மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம் என்று கூறினர்.

அறிவிப்பவர் : *ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : *முஸ்லிம் 5502*

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, ”யூதர்கள் அவர்களது கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி),
நூல் : புகாரி 1375

நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியில் சென்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையைக் கடந்து சென்றார்கள். அப்போது பிலாலே! நான் கேட்டுக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று கூறினார்கள். இந்தக் கப்ரில் உள்ளவர் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நபரைப் பற்றி விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு யூதனாக இருந்தார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : அஹ்மத் 12072

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed