கஅபாவின் சிறப்பு சட்டங்கள்

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

  • அங்கு கொலை செய்வதோ
  • போர் புரிவதோ கூடாது.
  • அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும்,
  • மரங்களை வெட்டுவதும்,
  • செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

 

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே” என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு “இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 4313, 1834

 

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோ ருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன் 22:25)

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள்.

1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன்,

2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன்,

3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6882

 

இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது

(அல்குர்ஆன் 9:28)

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், “எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது” என அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1622

 

பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.

ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:

“(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

1. அல் மஸ்ஜிதுல் ஹராம்,

2. மஸ்ஜிதுன் நபவி,

3. மஸ்ஜிதுல் அக்ஸா”

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1189

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது “கஃபா” ஆலயம் சென்று “ஹஜ்” செய்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

(அல்குர்ஆன் 3:97)

கஅபா’ ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

“மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.

ஆனால் இந்தத் தடை “கஅபா” விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)

நூல்: திர்மிதீ 795

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

“மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூற்கள்: புகாரி 1881, முஸ்லிம் 5236

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். “கஅபா’வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1593

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

நூல்: புகாரி 1591, 1896

“வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1595

கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது “கஅபா” இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் (இது) “புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1742

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed