ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா

செய்யலாம்.

ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் இங்குள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் சரியா

ஃபித்ரா குறித்த முழு விபரத்தையும் கூற முடியுமா

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள் மீதும் அடிமைகளுக்காக அவர்களின் எஜமானர்கள் மீதும், சிறுவர்களுக்காக அவர்களின் பொறுப்பாளர்கள் மீதும் இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும்.

நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

\ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்\

ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 1395, 1496, 4347

அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

மக்களில் உள்ள செல்வந்தர்கள், மக்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?

இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது என்று அவர் கூறினார்…(சுருக்கம்)

நூல் : புகாரி 6979

பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்க எந்த தடையுமில்லை.
——————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed