நெருப்பினால்  பூச்சிகளை கொல்லக் கூடாதா?

நாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : அபூதாவூத்

இது பலவீனமான ஹதீஸாகும்.

இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன் அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

எனினும், நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல.

அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.

மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத் தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி  3019  இது சரியான ஹதீஸ்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed