*வணிக விளம்பரங்களும் இஸ்லாமிய நெறிமுறைகளும்*
நவீன உலகில், வர்த்தகம் மற்றும் விளம்பரம் என்பது பிரிக்க முடியாத அங்கங்களாக மாறிவிட்டதை நாம் மறுப்பதற்கில்லை . ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க, கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகள் கையாளப்படுகின்றது.
இந்த யுக்திகளில், மனித உருவப்படங்கள், குறிப்பாக பெண்களின் படங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
ஆனால், *முஸ்லிமாகிய நாம் நமது தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்*.
அந்த வகையில், வணிக விளம்பரங்களுக்காக உயிருள்ளவற்றின் படங்களை, அதிலும் குறிப்பாக பெண்களின் படங்களைப் பயன்படுத்துவது ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இஸ்லாமிய மார்க்கத்தில், உயிருள்ளவற்றின் உருவங்களை வரைவது குறித்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.
*யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால், அவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது* என்று நபிகளாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. (புகாரி: 2225)
தொழில்நுட்ப (AI) வளர்ச்சியின் காரணமாக புகைப்படம் என்பது கையால் வரைவதிலிருந்து வேறுபட்டிருந்தாலும் அப்படங்களின் பயன்பாடு மார்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கல்வி, மருத்துவம், அல்லது பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கும், வர்த்தக நோக்கத்திற்காக ஒரு கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்துவதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
நவீன விளம்பரங்களின் பிரதான நோக்கம், வாடிக்கையாளர்களின் கவனத்தை விரைவாக ஈர்ப்பதே ஆகும்.
இதற்காக, விற்கப்படும் பொருளின் தரத்தையோ அதன் சிறப்பம்சங்களையோ விளக்குவதை விட, *அப்பொருளுடன் ஒரு பெண்ணின் கவர்ச்சிகரமான படத்தைச் சேர்ப்பதன் மூலம் கவனத்தை ஈர்க்கும் யுக்தியே அதிகம் கையாளப்படுகிறது*.
உதாரணமாக, ஒரு கண்ணாடி விற்பனை செய்யும் கடைக்கு, ஒரு பெண்ணின் முகம் எவ்விதத்திலும் அவசியமானதல்ல. இங்கு அந்தப் பெண், தனது கண்ணியத்தை இழந்து, ஒரு *விற்பனைப் பொருளாக or *கவன ஈர்ப்பு கருவியாக* மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்.
இது, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உயர்வான கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் முற்றிலும் முரணான செயலாகும்.
இஸ்லாம், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், சமூகத்தில் ஒழுக்கக் கேடுகள் பரவாமல் தடுப்பதற்காகவும் *ஹிஜாப்* எனும் உன்னதமான திரையைக் கடமையாக்கியுள்ளது.
ஒரு முஸ்லிம் பெண், தனது மஹ்ரமான (திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்கள்) உறவினர்களைத் தவிர, *பிற அந்நிய ஆண்கள் முன் தனது அழகை வெளிப்படுத்தக் கூடாது* என்பது தெளிவான சட்டம்.
ஆனால், வர்த்தக விளம்பரங்களில் பெண்களின் படங்கள் பயன்படுத்தப்படும்போது, அவை இந்த ஹிஜாபின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகின்றன.
அப்படங்கள் பொதுப் பார்வையில் வைக்கப்படும்போது, ஆயிரக்கணக்கான அந்நிய ஆண்களின் பார்வைகள் அப்படங்களின் மீது சர்வ சாதாரணமாக விழுகின்றன.
இது, இஸ்லாம் ஆண்களுக்குக் கட்டளையிடும்
*இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்* (24:30) என்ற கட்டளைக்கு மாற்றமாக அமைவதோடு, சமூகத்தில் ஃபித்னா ஏற்படவும் நேரடியாக வழிவகுக்கிறது.
விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் படங்கள், பெரும்பாலும் இயல்பான தோற்றத்தில் இருப்பதில்லை. மாறாக, *பார்வையாளரின் உணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கில், அதீத செயற்கை ஒப்பனைகள் மற்றும் கவர்ச்சிகரமான கோணங்களில் அவை படமாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்*.
இதன் ஒட்டுமொத்த நோக்கமே, பொருளை வாங்குவதை விட, அந்தப் படத்தின் கவர்ச்சியில் பார்வையாளரைக் கட்டிப்போடுவதாகும்.
இஸ்லாம் இத்தகைய தேவையற்ற கவர்ச்சியையும், அலங்காரத்தையும் அந்நியர்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, *இது ஹராமான வழியில் வர்த்தகத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைகிறது.*
ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உண்மையான வெற்றி, அவர் ஈட்டும் லாபத்தில் மட்டுமல்ல, அந்த லாபத்தில் நிறைந்திருக்கும் *அல்லாஹ்வின் பரக்கத்திலும் (மறைமுக பேரருள்) அடங்கியுள்ளது.*
ஹலாலான வழியில், நேர்மையாகவும், தரமாகவும் தொழில் செய்யும்போது மட்டுமே அந்த பரக்கத் நிரந்தரமாகக் கிடைக்கிறது.
மார்க்கம் தடுத்த அல்லது சந்தேகத்திற்குரிய வழிகளில் (உதாரணமாக, பெண்களின் படங்களைப் பயன்படுத்துதல்) வர்த்தகத்தை வளர்க்க முற்படும்போது, தற்காலிகமாக லாபம் கிடைப்பது போல் தோன்றினாலும்,
அங்கே *அல்லாஹ்வின் பரக்கத் நீக்கப்படும் அபாயம் உள்ளது*. மார்க்கத்தில் சந்தேகமான ஒரு விஷயத்தை விட்டு முழுமையாக விலகி, பேணுதலாக நடப்பதே ஒரு முஸ்லிமுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாதுகாப்பானது.
ஆகவே, ஒரு முஸ்லிம் தனது வணிக விளம்பரங்களில் உயிருள்ளவற்றின் படங்களை, குறிப்பாக அந்நியப் பெண்களின் படங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது கட்டாயமாகும்.
இதற்கு மாற்றாக, எண்ணற்ற ஹலாலான வழிகள் உள்ளன. விற்கப்படும் பொருளின் (*கண்ணாடிகள், பிரேம்கள்*) படங்களை மட்டும் அழகாகக் காட்சிப்படுத்தலாம்.
கடையின் சேவைகள், தனித்துவமான தரம், மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பர உத்திகளை அமைப்பதே இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டது மற்றும் நீடித்த பரக்கத்தைத் தரக்கூடியது என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும்
*الله اعلم*