*மார்க்கக் கல்வியா? உலகக் கல்வியா?* – *பெற்றோர்களின் தடம் புரண்ட முன்னுரிமை*
இன்றைய நவீன உலகில், முஸ்லிம் பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அவர்களை *மருத்துவர்களாகவோ, பொறியியலாளர்களாகவோ, AI சார்ந்த தொழில்நுட்பம்* அல்லது *உயர்ந்த பதவிகளில் அமர்த்தவோ வேண்டும்* என்ற ஆசையில், லட்சக்கணக்கில் செலவு செய்து *உலகக் கல்வியை ஊட்டுவதில் பேரார்வம்* காட்டுகிறார்கள். இது தவறல்ல; அவசியமான ஒன்றுதான்.
ஆனால், இந்த உலகக் கல்வி மோகத்தில், *எதற்காக நாம் படைக்கப்பட்டோமோ, அந்த அடிப்படை மார்க்கக் கல்வியை அலட்சியப்படுத்துவது* அல்லது இரண்டாம் பட்சமாக கருதுவது ஒரு பாரதூரமான தவறாகும்.
\\ *மறுமை மறந்த இம்மைத் தேடல்* \\
இஸ்லாம் உலகக் கல்வியைத் தடுக்கவில்லை, ஆனால் எதற்கும் ஒரு வரையறை உண்டு. நம் பிள்ளைகளின் இம்மை வாழ்விற்காக இவ்வளவு திட்டமிடும் நாம், *அவர்களின் நிரந்தரமான மறுமை வாழ்விற்காக என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளோம்* என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்:
“எனினும், *நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். மறுமையோ சிறந்ததாகும்; நிலையானதும் ஆகும்*.” (87:16-17)
நமது பிள்ளைகளை இவ்வுலகில் வெற்றியாளர்களாக ஆக்க வேண்டும் என்ற ஆசையில், *மறுமையில் நஷ்டவாளிகளாக ஆக்கிவிடக்கூடாது*. உலகக் கல்வி அவர்களை இவ்வுலகில் வசதியாக வாழ வைக்கலாம், ஆனால் *மார்க்கக் கல்வி மட்டுமே அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து, சுவனத்திற்கு வழிகாட்டும்*.
\\ *பெற்றோரின் உண்மையான கடமை* \\
பிள்ளைகளுக்கு உணவளிப்பதும், உடையளிப்பதும், கல்வி கொடுப்பதும் பெற்றோரின் கடமைதான். ஆனால், எல்லாவற்றையும் விட தலையாய கடமை, அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதாகும். அல்லாஹ் எச்சரிக்கிறான்:
*இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருளாவர்*…” (அல்குர்ஆன் 66:6)
நமது பிள்ளைகளுக்கு ஹலால்-ஹராம் (ஆகுமானவை-ஆகாதவை) பேணத் தெரியவில்லை, ஈமானின் அடிப்படைகள் தெரியவில்லை என்றால், நாம் அவர்களை எப்படி நரக நெருப்பிலிருந்து பாதுகாத்தவர்களாக ஆவோம்? பிள்ளைகள் நமக்கு ஒரு அமானிதம் (அடைக்கலம்) என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
*அல்லாஹ் எவருக்கு நன்மையை நாடுகிறானோ, அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்*. (நூல்: புகாரி71)
அல்லாஹ் ஒருவருக்கு உலகப் பட்டங்களை வழங்குவதை விட, மார்க்க ஞானத்தை வழங்குவதையே தனக்கு விருப்பமானவருக்கு வழங்கும் பாக்கியமாக நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு உலகக் கல்வியைக் கொடுங்கள், ஆனால் அதன் அடித்தளம் மார்க்கக் கல்வியாக இருக்கட்டும். முதலில் *ஈமான், தொழுகை, குர்ஆன் மற்றும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைக் கற்றுக் கொடுங்கள்*. அதன்பிறகு அவர்களை எந்தத் துறையிலும் படிக்க வையுங்கள்.
ஒரு பிள்ளை பெரிய விஞ்ஞானியாக இருந்து, ஆனால் தன் ரப்புக்கு நன்றி செலுத்த செய்யத் தெரியாதவராக இருந்தால், அந்த வெற்றியால் என்ன பயன்? அதே சமயம், மார்க்கப் பற்றுள்ள ஒரு மருத்துவர், தனது தொழிலை மறுமைக்கான சேவையாகச் செய்வார்.
உலகக் கல்வி இவ்வுலகோடு முடிந்துவிடும். ஆனால், நீங்கள் கற்றுக்கொடுத்த மார்க்கக் கல்வியும், அதன் பயனாக அவர்கள் செய்யும் அமல்களும், உங்களுக்கும் அவர்களுக்கும் மறுமையில் நிரந்தரப் பயனளிக்கும். நபிகளார் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால், மூன்றைத் தவிர அவனது மற்ற எல்லாச் செயல்களும் நின்றுவிடுகின்றன: 1. *நிலையான தர்மம்* 2. *பயன்பெறத்தக்க கல்வி* 3. *அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான (நல்லொழுக்கமுள்ள) பிள்ளை*.” (நூல்: முஸ்லிம்).
அந்த “ஸாலிஹான பிள்ளை” மார்க்கக் கல்வியின் மூலமே உருவாகும் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, நமது முன்னுரிமைகளைச் சரிசெய்வோம். மறுமையை இலக்காகக் கொண்டு இம்மையைச் சீரமைப்போம்.