|| *சொர்க்கத்தின் விலை அல்லாஹ்வின் கருணையே* ||
இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கை மற்றும் அமல் பற்றிய மிக முக்கியக் கோட்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது பின் வரும் (புகாரியில் 5673). *எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது*;
மாறாக, *அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும்* என்ற நபிகளாரின் கூற்று, முஸ்லிம்களின் மறுமை நம்பிக்கையில் *அல்லாஹ்வின் கருணை* வகிக்கும் மகத்தான இடத்தைப் நாம் பார்க்கமுடிகிறது.
ஒரு மனிதன் அல்லாஹ் கொடுத்த ஒரு கண்ணுக்கு நன்றி செலுத்துவதற்கோ அல்லது ஒரு சுவாசத்தின் மதிப்பை ஈடு செய்வதற்கோ கூட தனது வாழ்நாளில் செய்யும் அனைத்து அமல்களும் போதாது. இந்நிலையில், சொர்க்கத்தை நமது சொந்த முயற்சியால் மட்டுமே அடைய முடியும் என்று நினைப்பது அறியாமையாகும்.
எனவே, இந்த ஹதீஸ் அமல்களை இழிவுபடுத்தவில்லை; மாறாக, *அமல்களை ஒரு காரணியாக மட்டுமே பார்க்க வேண்டும்* என்றும், *சொர்க்கத்தின் நுழைவுச் சீட்டு அல்லாஹ்வின் தனிப்பெரும் அருளாகிய கருணையே* என்றும் வலியுறுத்துகிறது.
\\ *நபிகளாரின் பணிவும் முன்மாதிரியும்* \\
நபித்தோழர்கள், *தங்களையுமா, இறைத்தூதர் அவர்களே?* என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, நபிகளார் *(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர* என்று பதிலளித்தார்கள்.
மக்களிலே மிகச் சிறந்த அமல்களைச் செய்த, பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகளாரே, சொர்க்கம் செல்ல அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்த்தால், சாதாரண முஸ்லிம்களாகிய நாம் நம் அமல்களைக் குறித்து எந்தவிதமான ஆணவமும் கொள்ள முடியாது.
இந்த ஹதீஸ் *மனிதர்களுக்கு பணிவையும், எப்போதும் அல்லாஹ்வின் உதவி தேவை* என்ற உணர்வையும் ஊட்டுகிறது.
*சொர்க்கம் கருணையால் மட்டுமே கிடைக்கிறது என்றால், ஏன் நாம் நற்செயல்களில் பாடுபட வேண்டும்* என்ற கேள்வி நம் மனதில் எழும்.
நற்செயல்கள் என்பவை வெறும் கடமைகள் மட்டுமல்ல, அவை நமது *ஈமான் (இறை நம்பிக்கை)உண்மையானது என்பதற்கான சான்றுகளாகும்*.
இந்த அறிவுரை, நம்முடைய *நற்செயல்களே, நாம் அல்லாஹ்வின் கருணையைப் பெறுவதற்கான தகுதியை நமக்கு அளிக்கின்றன*.
ஹதீஸின் இறுதிப் பகுதி, வாழும் காலத்தின் மதிப்பையும் மரணத்தை எதிர்கொள்ளும் முறையையும் போதிக்கிறது. *மரணத்தை விரும்புவது கூடாது* நோய், வறுமை அல்லது சோதனைகள் போன்ற சிரமங்களின்போது ஒரு முஃமின் மரணத்தை விரும்புவது இஸ்லாமில் தடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த உலக வாழ்க்கை என்பது, ஒரு நல்ல மனிதர் உயிர்வாழ்வதால், *அவர் ஒவ்வொரு நாளும் மேலும் நற்செயல்களைச் செய்து, தனது சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள* வாய்ப்புக் கிடைக்கிறது.
ஒரு பாவம் செய்யும் மனிதர் உயிர்வாழ்வதால், *அவருக்கு ஒரு வேளை மனந்திரும்பி, தவ்பா (மனந்திருந்துதல்) செய்து, தனது கடந்த காலப் பாவங்களை அழித்துவிட்டு*, சொர்க்கத்திற்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கிறது.
வாழ்க்கை என்பது சோதனைகள் நிரைந்தது என்றாலும், அது நன்மையைத் தேடுவதற்கும் பாவங்களிலிருந்து மீள்வதற்கும் கிடைத்த பொக்கிஷமான கால அவகாசமாகும்.
மரணத்தை விரும்புவதன் மூலம் இந்த இரு பெரும் வாய்ப்புகளையும் ஒரு மனிதன் இழந்து விடுகிறான்.
இந்த ஹதீஸின் சாரம்சம் இதுவே, *நமது அமல்கள், சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிச் சீட்டு அல்ல*;
மாறாக, *அந்தத் தகுதிச் சீட்டை வழங்கும்படி அல்லாஹ்வின் கருணையை அழைக்கும் வேண்டுகோள்* ஆகும். அமல்கள் செய்வது அவசியம், ஆனால் நம்பிக்கை முழுவதும் அர்-ரஹ்மானின் (அளவற்ற அருளாளனின்) கருணையின் மீதே இருக்க வேண்டும்.
நமது கடமை, நமது அமல்களைச் சிறந்த முறையில் செய்துவிட்டு, முடிவுகளை அல்லாஹ்வின் அளவற்ற கருணையிடம் ஒப்படைப்பதாகும்.
ஏகத்துவம்
